
அலட்சியப்படுத்தலை விட மோசமான அரசியல் பழிவாங்கும் செயல் ஏதுமில்லை. வைகோ விஷயத்தில் ஸ்டாலின் இந்த அஸ்திரத்தத்தைத்தான் கையாண்டு நாக் அவுட் கொடுக்க துவங்கியிருக்கிறார்.
புழல் சிறையிலிருக்கும் வைகோ நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் வேனில் ஏறிய வைகோ செய்தியாளர்களிடம் ’விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட கடையடைப்பு வெற்றியடைந்துள்ளது. ஆனால் இதற்கு மு.க. ஸ்டாலின் காரணமில்லை. வணிகர்கள் தானாக முன்வந்து கடையடைத்தனர். நதிநீர் பிரச்னையில் தி.மு.க. குரல் கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு இப்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கபட நாடமாடுகிறார்.’ என்று கொதித்துவிட்டு புழல் கிளம்பினார்.
இதன் பிறகு ஸ்டாலினிடம் இருந்து செம ஹாட்டாக ஒரு அறிக்கை வந்தது. அதில் வைகோவின் சாடல்களுக்கு வெளுத்து கட்டி பதில் சொல்லியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைகோவின் பெயரை எங்கேயும் குறிப்பிடாமல் ஒதுக்கி ஓரங்கட்டியிருந்தார் ஸ்டாலின்.
‘’தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் மக்களின் பேராதரவுடன் பெருவெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், காய்த்த மரம் கல் அடி படுமென்பது போல் சில கட்சியினர் தி.மு.க. மீது வசை மாரி பொழிகிறார்கள். இதுவே முழு அடைப்பு போராட்ட வெற்றியின் விளைவுதான். விவசாயிகளுக்கு தி.மு. துரோகம் இழைத்துவிட்டதாக அவதூறு பரப்புவதையே அன்றாட அரசியல் நடவடிக்கையாக சிலர் வைத்திருக்கிறார்கள். காவிரி பிரச்னையில் எங்கள் கழகத்தின் மீது பழி போடுவதை அரசியல் உத்தியாக வைத்திருக்கிறார்கள் சிலர். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் அவதூறு சுமத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்ற அந்த கட்சிகள் பற்றி கவலைப்பட வேண்டாம். தூங்குவோரை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்போரை எழுப்ப முடியாது.” என்று நாகரிகமாக நாக் அவுட் கொடுத்திருக்கிறார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. என தங்களின் எதிர் கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின் ம.தி.மு.க. எனும் பெயரையோ அல்லது வைகோ எனும் பெயரையோ எங்கும் குறிப்பிடவில்லை. சில கட்சிகள், சில தலைவர்கள் என்று சிறு குறு கட்சிகள் ரேஞ்சுக்கு வைகோ தரப்பை டீல் செய்திருப்பது ம.தி.மு.க.வை மண்டை காய வைத்திருக்கிறது.
இது குறித்து கமெண்ட் அடிக்கும் தி.மு.க.வினர் ‘’தமிழ்நாட்டில் என்ன பிரச்னை நிகழ்ந்தாலும் அதற்கு தி.மு.க.வையும், தளபதி ஸ்டாலினையும் காரணம் காட்டி பேசுவதே வைகோவுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால் தளபதியோ இதற்கெல்லாம் கொதிப்படையாமல் அவரது பெயரை கூட குறிப்பிடாமல் அறிக்கை தட்டியது ம.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமரியாதை தாக்குதல். ‘உங்க பெயரை கூட குறிப்பிட நான் தயாரில்லாதபோது நீங்கள் எப்படி எங்களுக்கு எதிர்கட்சியாக இருக்க முடியும்.’ என்று மறைமுகமாக அடித்திருக்கிறார் தளபதி. இனியாவைது போலியாக வைகோ கொக்கரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நிலையற்ற அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை விமர்சிக்க திராணியில்லாத வைகோ, எங்கள் மீது பாய்வது ஏன்?” என்று பொளந்து கட்டுகிறார்கள்.
புழல் புலி இதற்கும் பாயுமோ?