
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா தம்முடன் இருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் கூட்டணி சேர வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதாகவும் திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அவரது மரணமும் பெரும் மர்மமாகவே உள்ளது. அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் பிரியும் வரை ஜெ. மரணம் குறித்து பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருந்தாலும் வெளிகாட்டி கொள்ள வில்லை.
ஆனால் ஓ.பி.எஸ் எப்போது சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த கேள்வி அனைவரிடத்திலும் வெளியே வர தொடங்கியது.
மேலும் ஓ.பி.எஸ் தரப்பினரும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தரப்பினரும் ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெ. ஆன்மா என்னுடன்தான் உள்ளது என திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் புதிதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மஹரிஷி ஃபார்மா என்பவர், ஓ.பன்னீர்செல்வத்தையும், தீபாவையும் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தார். அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் வீட்டின் அருகே செய்தியாளர்களை சந்தித்த மஹரிஷி ஃபார்மா, ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் அவர் பேசினார்.
அப்போது ஜெயலலிதா ஆன்மா போல் அவர் பேசியதாவது:
நான் இறந்து 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். ஓ.பி.எஸ் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.