மக்களுக்கு நிவாரணம் அறிவிக்காமல் ஏமாத்துறீங்களே... மோடி அரசை விளாசிய ஜவாஹிருல்லா!

By Asianet TamilFirst Published Apr 14, 2020, 6:22 PM IST
Highlights

ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து, தொழில்கள் முடங்கி, வருமானம் இல்லாமல் வீட்டிலே பசியாலும், பட்டினியாலும் அவதியுறும் மக்களுக்கு என்ன நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும் என்பதை மோடி தெரிவிக்காதது பெரும் ஏமாற்றமே! ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றபோதும் இதுவரை அமலிலிருந்த ஊரடங்கு உத்தரவில் மக்களின் பசியையும், பட்டினியையும் மத்திய அரசு புரிந்து கொள்ளாதது ஏன்?
 

மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டும் மக்களிடம் பெற்றுக் கொள்ளாமல் பட்டினிச் சாவிலிருந்து ஏழைகளைக் காப்பாற்றத் தேவையான நிவாரணங்களை உடனே அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டார்.  இந்நிலையில் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எச்.ஜவாஹிருல்லா  வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா பாதிப்பில் ஒட்டுமொத்த உலகமும் உறைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அதில் நாடும், நாட்டு மக்களும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுரைகளை வழங்கினார். அவர் ஆற்றிய உரையில் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெரிவித்தாரே தவிர, மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்யும் என்பதைத் தெரிவிக்கவில்லை.
ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து, தொழில்கள் முடங்கி, வருமானம் இல்லாமல் வீட்டிலே பசியாலும், பட்டினியாலும் அவதியுறும் மக்களுக்கு என்ன நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும் என்பதை மோடி தெரிவிக்காதது பெரும் ஏமாற்றமே! ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றபோதும் இதுவரை அமலிலிருந்த ஊரடங்கு உத்தரவில் மக்களின் பசியையும், பட்டினியையும் மத்திய அரசு புரிந்து கொள்ளாதது ஏன்?
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதைத் தடுத்தும், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் போதிய நிவாரணத்தை முழுமையாக ஒதுக்காமலும் ஊரடங்கை நீட்டிப்பது பயனற்றது. வீட்டிலேயே முகக்கவசம் செய்து கொள்வது, முதியோர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட ஏழு வாக்குறுதிகளை மக்களிடம் கேட்டுள்ள மோடி இந்த சிக்கலான சூழ்நிலையில் பொருளாதாரத்தை இழந்துள்ள நாட்டு மக்களுக்கு என்ன வாக்குறுதியை அளிக்க உள்ளார்?


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முடங்கிக் கிடக்கும் 3 கோடி பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல எவ்வித திட்டத்தையும் பிரதமர் அறிவிக்காதது சாமானிய மக்கள் மீது இந்த அரசிற்கு அக்கறை இல்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது. மே-3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இல்லாமல் இருந்தால்தான் இந்த ஊரடங்கு உத்தரவு முழுமையான வெற்றி பெறும் என்பதை மோடியின் மத்திய அரசு உணராதது ஏன்?
மொத்தத்தில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஏமாற்றம் அளித்த உரையாகவே இன்றைய பிரதமரின் உரை அமைந்தது. எனவே, மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டும் மக்களிடம் பெற்றுக் கொள்ளாமல் பட்டினிச் சாவிலிருந்து ஏழைகளைக் காப்பாற்றத் தேவையான நிவாரணங்களை உடனே அறிவிக்க வேண்டும்” என்று  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

click me!