இக்கட்டான நேரத்திலும் மக்களை சுரண்டுறீங்களே... மோடி அரசுக்கு எதிராக ஜவாஹிருல்லா ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Jul 1, 2020, 7:52 PM IST
Highlights

கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்தி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது மத்திய அரசு. தமிழக அரசும் தனது பங்கிற்கு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது.

இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பாலும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 9 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் விலை 9.50 ரூபாய்க்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை இன்று ரூ.83.63 ரூபாயும், டீசல் விலை 77.72 ரூபாயாகவும் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்தி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது மத்திய அரசு. தமிழக அரசும் தனது பங்கிற்கு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது. கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு 22 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.


ஏற்கனவே, ஊரடங்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் இந்த பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

click me!