எண்: 12, பரிசுத்தமா நகர்.. சசிகலா தஞ்சாவூரை தாண்ட கூடாது!! பரோலில் செக் வைத்த பரப்பன அக்ரஹாரா

First Published Mar 20, 2018, 4:48 PM IST
Highlights
jail conditions for sasikala parole


சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், கணவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக சசிகலா, நிபந்தனைகளின் அடிப்படையில் சிறையிலிருந்து 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார்.

அதன்பின்னர் ஓரளவிற்கு உடல்நலம் தேறிவந்த நடராஜன், கடந்த மூன்று தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஒன்றரை மணிக்கு உயிரிழந்தார்.

நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. கணவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். அவரது பரோல் மனுவை ஏற்றுக்கொண்ட பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் சில நிபந்தனைகளுடன் அவருக்கு பரோல் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த சசிகலா, கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் விரைந்துள்ளார்.

சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகள்:

* எண் - 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும்.

* பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

* பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் குறிப்பிட்ட முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும் என்பதால், சென்னைக்கு எல்லாம் சசிகலா செல்ல முடியாது. 
 

click me!