Jai Bhim: இதுதான்.. இதை எதிர்பார்த்துதான் ஜெய் பீம் பெயரையே சூர்யாவுக்கு கொடுத்தேன்.. அதிரவிட்ட பா.ரஞ்சித்.

By Ezhilarasan BabuFirst Published Nov 30, 2021, 11:03 AM IST
Highlights

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜெய் பீம் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானது என்ற புரிதல்  இருந்தது. அது அம்பேத்கரை துதி பாடுவது என்று கொச்சையாக பேசப்பட்டு வந்தது, அது வடமாநிலத்தைச்  சேர்ந்த சொல் என்றும், தமிழ் சொல் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. 

ஜெய்பீம் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானது என்ற பிம்பத்தை உடைப்பதற்காக நடிகர் சூர்யாவுக்காக அந்தப் பெயரை விட்டுக் கொடுத்ததாகவும் இப்போது அந்த வார்த்தை நாடு முழுவதும், நாட்டின் எல்லை கடந்தும் பரவியுள்ளது என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அது ஏதோ புரியாத வார்த்தை போல பலர் பாவித்து வந்த நிலையில், இப்போது ஜெய் பீம் பொதுச் சொல்லாக மாறி இருக்கிறது என்றும், அந்த வார்த்தையை சரியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக அது வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. அதேபோல் நடிகர் சூர்யவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், அந்த குறிப்பிட்ட விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமகவினர் அதில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. எந்த அளவுக்கு இந்த படம் வெற்றிபெற்றுள்ளதோ அதே அளவுக்கு சர்ச்சையையும் சம்பாதித்துவிட்டது என்றே சொல்லலாம் ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்கும் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட இயக்கங்கள், அக்னிசட்டி காலண்டர் வைத்தது பாமக, வன்னியர் சங்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஜெய் பீம் என்று பெயர் வைத்ததுதான் பிரச்சனை என கூறிவருகின்றனர். அந்தளவுக்கு ஜெய்பீம் என்ற பெயர் அரசியல் மயப்பட்டுள்ளது என்றே சொல்லலாம் இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தன் வசம் வைத்திருந்த ஜெய்பீம் பெயரை தான் ஏன் சூர்யாவுக்கு வழங்கினேன் என்பது குறித்து பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த விவரம் பின்வருமாறு:- 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜெய் பீம் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானது என்ற புரிதல்  இருந்தது. அது அம்பேத்கரை துதி பாடுவது என்று கொச்சையாக பேசப்பட்டு வந்தது, அது வடமாநிலத்தைச்  சேர்ந்த சொல் என்றும், தமிழ் சொல் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. நான் மேடைகளில் அதை பேசும்போதெல்லாம் பலர் என்னை விமர்சிப்பதும் நடந்தது. நம் சமூகத்தை சேர்ந்தவர்களே என்னை அதை வைத்து கேலி கிண்டல் செய்தனர். ஆனால் அம்பேத்கரை நான் பின்பற்றுவதால் அதை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் என்னைத் தொடர்பு கொண்டு அந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டது. நானும் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் இதுவரை அது ஒரு சமூகத்திற்கான பெயர் என்ற  புதுபுத்தியை மாற்ற முடியும் என்று எண்ணினேன். ஜெய்பீம் என்ற அந்த ஒற்றை வார்த்தை தான் அனைத்து சமூகங்களையும்  ஒன்றிணைக்க கூடியது எனவே இதை பொது சமூகத்துக்கான ஒரு எழுச்சிமிகு சொல்லாக மாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்த  நிறுவனத்திடம் நான் ஒருகோரிக்கையை மட்டும் வைத்தேன். இந்தப் பெயரை  நான் தருகிறேன் அந்த பெயருக்கு பிரச்சினை இல்லாத படமாக உங்கள் படம் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

இந்த வார்த்தை ஜனரஞ்சகப்பட வேண்டும் என்பதற்காகவே அந்த பெயரை கொடுக்க ஒப்புக் கொண்டேன். பொது சமூகத்திடம் அந்த வார்த்தை போய் சேர வேண்டும் என்று நான் விரும்பினேன். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தை ஒரு சமூகத்திற்கான குறியீடாக நிற்காமல் பொது சமூகத்திற்கான குறியீடாக மாற விரும்பினேன், இந்த வார்த்தைக்கான கருவே ஒரு போராட்ட சமூகம் தனக்கான நீதியை வென்றெடுப்பதுதான் அதின் அர்த்தம். நீதியை வென்றெடுப்பதற்காக போராடுபவர்களுக்கு துணை நிற்கிற ஒரு வார்த்தையாக இருப்பது தான் ஜெய் பீம். அம்பேத்கர் என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் யோசித்தவர் அல்ல, இந்திய சமூகத்திற்காகவே யோசித்தவர். போராடத் துடிக்கிற. எதிர்க்க துணிகர, அடக்குமுறைக்கு எதிராக பேசுகிற ஒவ்வொருவரும் ஜெய்பீம் என்ற வார்த்தையை முழங்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காகத்தான் அதை கொடுத்தேன். எதை எதிர்பார்த்து கொடுத்தேனோ அது இப்போது நடந்திருக்கிறது என்றுதான் நான் எண்ணுகிறேன். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் கூட இப்போது தமிழ்நாட்டில் அது குறித்துப் பேசுகிறார்கள், விவாதப்பொருளாகவே அந்த வார்த்தை மாறியிருக்கிறது. ஜெய்பீம் என்றால் வித்தியாசமாக பார்க்கிற அந்த பார்வை இப்போது மாறியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!