DMK-Congress alliance: இதுதான் காங் ஆட்சி செய்யும் மாநிலங்களின் லட்சணம்.. திமுகவை டாராக்கிய புள்ளி விவரம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 30, 2021, 10:15 AM IST
Highlights

மத்திய அரசு மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவந்தபோது அதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்தன. தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்து அப்போது சந்தேகம் எழுப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

உலகம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் என தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றில் கூட 90 சதவீதத்திற்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாஜக ஆளும் பல மாநிலங்களில் 90 சதவீதத்துக்கு அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ஒட்டுமொத்த மனித சமூகமும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒன்றுக்கு இரண்டு  என தடுப்பூசிகளை உருவாக்கிய இந்தியா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் அதை மக்களுக்கு செலுத்த தொடங்கியது. துவக்கத்தில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோது மக்கள் அதைச் செலுத்திக் கொள்ள தயங்கினார். ஆனால்  தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என பல்வேறு தொடர் விழிப்புணர்வு மக்களிடையே  ஏற்படுத்தப்பட்டு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 203 நாட்களில் 50 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சரியாக தடுப்பூசிகளை தருவதில்லை, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகமாகவும், மற்றவர்க்கு குறைவாகவும் தரப்படுகிறது என தமிழகம் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றச்சாட்டின. 

இதனால் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டன. ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் தடுப்பூசி செயல்பாடுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என உறுதி அளித்தது. தொடர்ந்து தடுப்பூசிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி  100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை பாராட்டின. மொத்தத்தில் இதுவரை இந்தியாவில் 122.41  கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ்சின் அடுத்த உருமாற்றமாக, ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும், இது உலக அளவில் பரவும் பட்சத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்குள் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பு ஊசி  100% செலுத்தி கொண்ட நாடுகளில், இந்த புதிய வைரசின் தாக்கும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்தாத நாடுகள் விரைந்து தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் மற்றும் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடுப்பூசி எந்த அளவுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் மாநிலங்கள் வாரியாக முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பாஜக ஆட்சி செய்யும்  ஏழு மாநிலங்களில்  90 சதவீதத்திற்கும் அதிகமாக முதல் டோஸ் தடுப்பூசியும்,  பாஜக ஆளும் 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றில் கூட 90 சதவீதத்திற்கு மேல் முதல் டோஸ் தடுப்பு செலுத்தப்படவில்லை என்பதை அந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்கண்ட், பஞ்சாப், தமிழகம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி செய்யும் தமிழகத்தில் 78.1  சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  42.65 சதவீதம்பேருக்கு மட்டுமே  இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என புள்ளி விவரம் கூறுகிறது. 

காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள் (1வது, 2வது டோஸ்):

• ஜார்கண்ட் –66.2 %, 30.8 %

• பஞ்சாப் –72.5 %, 32.8 %

• தமிழ்நாடு –78.1 %, 42.65 %

• மகாராஷ்டிரா –80.11 %, 42.5 %

• சத்தீஸ்கர் –83.2%,47.2%

• ராஜஸ்தான் –84.2 %, 46.9%

• மேற்கு வங்காளம் –86.6 %, 39.4 %

இதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் 8 மாநிலங்களில் 7 மாநிலங்கள் 90% அளவுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இமாச்சல் பிரதேசத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 91.9 சதவீதம் இரண்டாவது தவணை செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோவாவிலும் 100 சதவீதம் அளவிற்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் காட்டுகிறது. முதல் தவனை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளையை முழுமையாக செலுத்தாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளே கேட்டு அழுத்தம் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் மத்திய அரசு குற்றஞ்சாட்டுயுள்ளது. 

பாஜக ஆளும் மாநிலங்கள் (1வது, 2வது டோஸ்):

• ஹெச்பி –100 %, 91.9 %

• கோவா –100 %, 87.9%

• குஜராத் -93.5 %, 70.3 %

• உத்தரகாண்ட் –93.0 %, 61.7 %

• MP –92.8 %, 62.9 %

• கர்நாடகா –90.9%,59.1%

• ஹரியானா –90.04%,48.3%

• அசாம் –88.9 %, 50 %

• திரிபுரா –80.5%,63.5%

மத்திய அரசு மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவந்தபோது அதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்தன. தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்து அப்போது சந்தேகம் எழுப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது மக்கள் மத்தியில்  தடுப்பூசி குறித்து பெருமளவிற்கு பீதியை ஏற்படுத்தியது, இதனால் பெரும்பாலான மக்கள் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை, இதனால் மத்திய அரசு மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஏற்படும் நன்மை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அதன் பிறகே தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டியது. இதுவே இன்று தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

click me!