Jai Bhim:குறவர்களை முதுகில் குத்திட்டியே சூர்யா.. நீ பணம் சம்பாதிக்க எங்களுக்கு திருட்டு பட்டமா.?

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 1:16 PM IST
Highlights

ஆனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குறவர்கள்தான். இதில் பலர் சூர்யாவின் நடிப்பை பார்த்து ரசிக்கிறார்கள், ஆனால் எங்கள் குறவர் சமூகத்தை திருட்டு சம்பந்தமாக அவர் சித்தரித்திருக்கிறார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் குறவர் சமூகத்திற்கு நடந்த அநீதியை இருளர் சமூகத்துக்கு நடந்தது போல காட்டியதுடன் குறவர் சமூகத்தை ஒரு திருட்டு சமூகம் போல சித்தரித்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும், எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டுமென நீதி கேட்டு கொட்டும் மழையில் சூர்யா வீட்டு முன் தாங்கள் திரண்டபோது போலீசார் தங்களை கைது செய்து அப்புறப்படுத்தினர் என்றும்,  பழங்குடி மக்களுக்கு நீதி வேண்டும் என சினிமாவில் முழங்கிய சூர்யா எங்களுக்கு அநீதி இழைத்து விட்டார் என குறவர் இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே வன்னிய சமூகத்தினர் ஜெய்பீம் திரைப்படத்தில் தங்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது குறவர் இன மக்களும் சூர்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருவது அவருக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் அதன் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதில் திருப்பதியாக வில்லை. இதனால் சூர்யா-பாமக இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் குறவர் சமூக மக்களையும் சூர்யா இழிவு படுத்தியுள்ளார் என்றும், தங்கள் சமூகத்தை திருட்டு சமூகமாக அவர் சித்திரித்திருப்பதாகவும் குறவர் சமூக மக்கள் இப்போது களத்திற்கு வந்துள்ளனர்.  இது குறித்து குறவன் மக்கள் நலச்சங்கம் மாநிலத் தலைவர் முருகேசன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது. 

உண்மையிலேயே ஜெய்பீம் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள கதை குறவர்களுடையது. ஆனால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றாக இருளர்கள் என மாற்றி இப்படத்தில் இயக்குனர் மற்றும் அதன் தயாரிப்பாளர் சூர்யா ஆகியோர் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இது எங்கள் குறவர் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . அதேபோல் படத்தில் குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் அமைந்துள்ளது, குறவர் சமூகம் திருட்டு சமூகம் என்பது போல படக்காட்சிகள் உள்ளது.  இது தொடர்பாக வெளியாகியுள்ள நீதிமன்ற தீர்ப்பு குறவர் சமூகம்தான் பாதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.  ராஜாக்கண்ணு என்பவர் ஒரு குறவர். ஆனால் அதை மறைத்துவிட்டு அவரை இருளராக காட்டியுள்ளனர். இதனால் இருளர் மக்கள் தான் பொய் வழக்குகளுக்கு பாதிக்கப்படுவதாகவும் பிரச்சனை திசை திருப்பப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குறவர்கள்தான். இதில் பலர் சூர்யாவின் நடிப்பை பார்த்து ரசிக்கிறார்கள், ஆனால் எங்கள் குறவர் சமூகத்தை திருட்டு சம்பந்தமாக அவர் சித்தரித்திருக்கிறார். இது காலத்திற்கும் எங்கள் சமூகத்திற்கு அவபெயராக இருக்கும். ஒரு உண்மையை திட்டமிட்டு மறைந்து தாய் குடியான குறிஞ்சி நிலமக்களான குறவர் இனத்திற்கு இவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள். கேட்டால் படைப்பு சுதந்திரம் என்கிறார்கள், 10 ஆம் தேதி ஜெய் பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அந்த படத்தை பார்த்த உடன் 11 ஆம் தேதியே கொட்டும் மழையில் நனைந்துகொண்டு எங்கள் குறவர் சமுகத்தை இப்படி திருட்டு சமூகமாக அடையாளப்படுத்தி இருக்கிறீர்களே, அதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அவரது வீட்டின் முன்பு திரண்டோம், ஆனால் திரைப்படத்தில் நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று முழங்கும் சூர்யா, உடனே போலீசை ஏவி எங்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார். இப்போது குறவர் மக்கள் அனைவரும் சூர்யா மீது மிகுந்த மன வருத்தத்திலும், காயத்திலும் இருக்கிறோம். இதற்கு உடனே சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!