வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது... தமிழர்களை குழப்புவதே திமுக அரசுக்கு வேலை... அண்ணாமலை ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 2, 2021, 12:23 PM IST
Highlights

திமுக அரசு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப்போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து குழப்பிக் கொண்டிருக்கிறது

தமிழர்களை குழப்புவதே திமுக அரசுக்கு வேலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 
   
தமிழகத்தில் 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழகத்தில் ஆரம்பம் முதலே சித்திரை 1-ம் தேதியே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட அறிவித்தது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு தோல்வியில் முடிந்ததை அடுத்து, அதிமுக ஆட்சியில் இருந்து மீண்டும் சித்திரை 1-ம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் தொகுப்பு பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என்று அச்சிடப்பட்டு பை வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘’தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதியை மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

2011-ம் ஆண்டு முதல் மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்பதை அப்போதைய தமிழக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. ஆனால், இப்போது திமுக அரசு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப்போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து குழப்பிக் கொண்டிருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!