
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் தலைமைச் செயலகம் பகுதியில் 6000 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களில்இருந்து வரும் ஆசிரியர்களை போலீசார் வளைத்து, வளைத்து கைது செய்து வருகின்றனர்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களை அழைத்து பேசி தீர்வு காண முடியாத தமிழக அரசு, போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோரை இன்று அதிகாலை காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த 32 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே , தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதனால் தலைமை செயலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.