
ஜெயலலிதா மரணம் குறித்து சிறிது சிறிதாக உண்மையைச் சொல்வதற்கு பதிலாக மொத்தமாக எல்லாவற்றையும் கூறிவிடலாமே என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்த்ததாகவும், இட்லி-சட்னி சாப்பிட்டதாக கூறியதெல்லாம் பொய் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறிது சிறிதாக உண்மையை சொல்வதற்கு பதிலாக மொத்தமாக எல்லாவற்றையும் கூறிவிடலாமே என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை படத்தை வெளியிடுவோம் என்று கூறியவர்கள் இத்தனை நாள் என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆழமான சந்தேகத்தை தற்போது நிரூபணமாக்கிவிட்டனர் என்றும், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிட்டாலும், வெளியிடாவிட்டாலும் வழக்கு தொடர்வது உறுதி என்றும் தீபா கூறினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் மீதான சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தீபா கூறினார்.