பாஜக தலைவரானார் ஜே.பி. நட்டா... பாஜகவில் புதிய அதிகாரமிக்க பதவிக்கு வந்தார்!

By Asianet TamilFirst Published Jan 21, 2020, 9:55 AM IST
Highlights

கடந்த ஆண்டு மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை பின்பற்றப்படுவதால், அமித் ஷாவுக்குப் பதில் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அமித் ஷாவுக்கு மாற்றாக புதிய தலைவர் நியமிக்கப்படாமல், செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் தேசிய தலைவராக அக்கட்சியின் செயல் தலைவராகப் பணியாற்றிவந்த ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் தலைவராக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை பின்பற்றப்படுவதால், அமித் ஷாவுக்குப் பதில் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அமித் ஷாவுக்கு மாற்றாக புதிய தலைவர் நியமிக்கப்படாமல், செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அகில இந்திய பாஜகவின் உட்கட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்றுவந்தது. பெரும்பாலான மாநிலங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இறுதியாக தேசிய தலைவருக்கான தேர்தல்  தொடங்கியது.  நேற்று வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. காலையில் ஜே.பி.  நட்டா வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடைய பெயரை  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு தலைவர் பதவியிலிருந்து விலகி செல்லும் அமித் ஷா பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் நட்டாவை வாழ்த்தினர். ஜே.பி. நட்டா பதவியேற்றதையடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புதிய பொறுப்பை ஏற்றுள்ள நட்டாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அர்ப்பணிப்பு உள்ளவர். எப்போதும் ஒழுக்கத்தை பேணுபவர். கட்சியில் தொடக்கக் காலத்திலிருந்தே முக்கியப் பங்கு வகித்துவருகிறார். இவருடைய பதவி காலத்தில்பாஜக பல புதிய உயரங்களை தொடும்” என நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில் தெரிவித்திருந்தார்.
பாஜகவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குப் பிறகு அதிகாரமிக்க தலைவராக ஜே.பி. நட்டா உருவாகியுள்ளார்.

click me!