
அதிமுக இந்த அளவிற்கு படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு தொண்டர்கள் காரணமல்ல, கட்சித் தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக தன்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ள அவர், அதிமுக தலைவர்கள் திமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயலாற்ற வில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது, கட்சிக்கு ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் அக்காட்சி கட்டுக்கோப்பை இழந்து வருகிறது, ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையால் அதிமுகவை ஆளுமைமிக்க ஜெயலலிதாவை போலவோ, எம்ஜிஆரைப் போலவோ கட்டுக்கோப்பாக வழி நடத்த முடியவில்லை. இந்நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியைக் கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. மொத்தத்தில் அதிமுக காலப்போக்கில் கற்பூரம் போல கரைந்து வருகிறது என்ற விமர்சனமும் அக்காட்சியின் மீது எழுந்துள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை அதிமுகவை தவறாக வழிநடத்துகிறது, அதுதான் தோல்விக்கு காரணம் என்று பலரும் பொருமி வருகின்றனர். இந்நிலையில்தான் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அதிமுக என்ற கட்சி எதிர்காலத்தில் இருக்காது என்றும் அது திமுகவுடன் சங்கமித்து விடும் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக பேச்சாறர் தீப்பொறி முருகேசன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அதிமுக தோல்விக்காண காரணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அதிமுகவின் தோல்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
எம்ஜிஆர் அவர்கள் உழைத்த உழைப்பை வீணாக்கும் வகையில் தற்போதைய அதிமுக தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவின் வெற்றிக்காக தெருத்தெருவாக அலைந்து கட்சியை வளர்த்தார். ஜெயலலிதாவும் அதேபோலதான் செயல்பட்டார், ஆனால் தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அதாவது ஆங்காங்கே ஒரு மண்டபத்திற்கு வந்து அங்குமட்டும் பேசிவிட்டு சென்று விட்டனர். இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து யாரிடமும் அவர்கள் பேசவில்லை. நான் தலைமைக் கழகப் பேச்சாளராக இருக்கிறேன், எம்ஜிஆரே என்னை பலமுறை பாராட்டி இருக்கிறார். நான் பேசாத மேடைகளே இல்லை, பல ஆண்டுகளாக அதிமுகவில் இருக்கிறேன், ஆனால் இதுவரை அதிமுக இந்தளவுக்கு தோல்வியை சந்தித்தது இல்லை. அதிமுகவுக்காக உழைக்க அதிமுக தொண்டர்கள் தயாராக இருந்தார்கள், ஆனால் அவர்களை கட்சி பயன்படுத்தவில்லை, என்னைபோன்ற பேச்சாளர்கள் பேச தயாராக இருந்தார்கள், திமுகவின் 9மாத கால ஆட்சி சீர்கேட்டை எடுத்துச் சொல்ல தயாராக இருந்தனர், ஆனால் என்னைப் போன்ற பேச்சாளர்களை இந்த தலைவர்கள் பயன்படுத்தவில்லை.
தலைவர்கள் முறையாக செயல்படவில்லை, அதிமுகவின் இந்த தோல்விக்கு முழு முதற் காரணம் இந்த தலைவர்கள்தான், மக்களும் காரணமல்ல, தொண்டர்களும் காரணமல்ல, திமுகவின் வெற்றிக்கு பின்னணியில் அவருடைய அதிகார பலம், பண பலம் இருந்தாலும் கூட அதிமுக தலைவர்கள் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செயல்படவே இல்லை. இனி இதுபோன்ற ஒரு தோல்வியை சந்திக்க கூடாது என்றால் எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதனால் என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில்தான் நான் இந்த பேட்டியை கொடுக்கிறேன். இந்த தோல்வி என்பது அதிமுகவின் தோல்வி அல்ல, அதிமுக தலைவர்களால் உருவாக்கப்பட்ட தோல்வி, தலைவர்கள் என்றால் தொண்டர்கள் எளிதாக சந்திக்கும் வகையில் இருக்கவேண்டும், ஆனால் இப்போது இருக்கிற தலைவர்களின் பக்கத்தில் கூட செல்ல முடியவில்லை. இப்போது இருக்கிற தலைவர்கள் இனி மேலாவது திருந்தி கட்சியை காப்பாற்ற வேண்டும்.
இதேநேரத்தில் பாஜக திமுகவை காட்டிலும் பல இடங்களில் முன்னேறி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அதிமுக திமுகவிற்கு மாற்று கட்சியை எதிர்பார்க்கிறார்கள், அதன் வெளிப்பாடுதான் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, ஆனால் அதிமுக தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தங்களுக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என தவறாக முடிவெடுக்கிறார்கள். இனி சிறுபான்மையினர் வாக்குகளை நம்பி அரசியல் முடிவு எடுப்பதால் அதிமுகவுக்கு ஒரு பலனும் ஏற்படாது. அனைத்து தரப்பு வாக்குகளையும் நாம் பெற முயற்சிக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாதிக்கு மேற்பட்ட இடங்களில் அதிமுக வென்றிருக்கும். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்..