ஜூலை மாதம் முடிந்தது..! வெள்ளை அறிக்கை மிஸ்ஸிங்..! அடுத்தது என்ன?

By Selva KathirFirst Published Aug 3, 2021, 11:04 AM IST
Highlights

இந்த வெள்ளை அறிக்கை வெளியானால் அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படும் என்றெல்லாம் திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் பழனிவேல் தியாகராஜன் கூறியது போல் ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. அதே சமயம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கடன் வாங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட வெள்ளை அறிக்கை தற்போது வரை வெளியாகவில்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அக்கட்சி தேர்தலின் போதுகொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மிகவும் மோசமாக உள்ளது என்றே பிரச்சாரத்தின் போது திமுக தலைவர்கள் கூறி வந்தனர். எனவே அந்த நிதிநிலையை எப்படி  சீரமைக்கப்போகிறார்கள் என்கிற கேள்வியும் உடன் எழுந்தது. அத்துடன் புதிய அரசின் பட்ஜெட் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஏனென்றால் ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது எதிர்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. தேர்தலின் போது நிறைவேற்றுவதாக கூறி வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். ஆனால் அதற்கெல்லாம் பதிலடியாக பட்ஜெட் இருக்கும் என்று திமுக தரப்பில் பதில்அளிக்கப்பட்டது. அத்துடன் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கடைசியில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் நிதி நிலை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். அதாவது கடந்த பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலை எப்படி இருந்தது, அதற்கு காரணம் என்ன? பெற்ற கடன் என்ன? செலுத்திய வட்டி என்கிற போன்ற விவரங்களைத்தான் பிடிஆர் வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த வெள்ளை அறிக்கை வெளியானால் அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படும் என்றெல்லாம் திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் பழனிவேல் தியாகராஜன் கூறியது போல் ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. அதே சமயம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கடன் வாங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதே போல் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் எப்போது என்கிற தகவலும் வெளியாகாமல் உள்ளது. தற்போது வரை கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை வைத்த மட்டுமே தமிழக அரசு இயங்கி வருகிறது.

விரைவாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த கையோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது போது வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை மற்றும் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் பிடிஆர் என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

click me!