
இன்றைய காலை நேரப் பொழுது, பலருக்கும் அதிர வைக்கும் ஆச்சரியப் பொழுதாகவே விடிந்திருக்கிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற செய்தி தான் அது. தொடர்ந்து, சென்னையில் மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஆனால், சோதனை இங்கு மட்டும் நடைபெறவில்லை. தமிழகம், கர்நாடகா, டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகள் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. குறிப்பாக, போலி நிறுவனங்களைத் தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி ஏமாற்றியவர்களின் இருப்பிடங்களில்தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படி, போலி நிறுவனங்கள் மூலம் அன்னிய செலாவணி மோசடிக்கு ஜெயா டிவி உதவியதா என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்ற வருட டிமானிடைசேஷன் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இல்லாத நிறுவனங்களை இருப்பது போல் பொய்யாகக் கணக்குக் காட்டி, முறைகேட்டில் ஈடுபட்ட ஷெல் கம்பெனிஸ் எனப்படும் போலி நிறுவனங்களைக் கண்டறிந்தது மத்திய அரசு. இப்படி சுமார் 2.1 லட்சம் நிறுவனங்கள் போலியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவற்றின் பதிவுகளை ரத்து செய்தது மத்திய அரசு.
இப்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் நிறுவனங்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அவற்றின் பதிவை ரத்து செய்த அமைச்சகம் வங்கி கணக்குகளை இயக்க, கட்டுப்பாடு விதித்துள்ளது. அத்துடன், 1.65 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதில் ஆச்சரியமான விஷயம், நிறுவனங்கள் பதிவு நீக்கத்தில், 24 ஆயிரத்து 48 நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டன. இந்த வகையில் தமிழகமே முதலிடத்தை பிடித்தது.
அடுத்து, 12 ஆயிரத்து, 692 நிறுவனங்களுடன் குஜராத், 4,760 நிறுவனங்கள் உடன், ஒடிசா மாநிலங்களும் உள்ளன. இதேபோல, தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் பட்டியலில், 74 ஆயிரத்து, 920 பேருடன் டில்லி முதலிடம் பிடித்தது.
இப்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் மற்றும் பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களாக, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இருந்தது தெரியவந்தது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குனர்கள் பட்டியலில் சிறையில் உள்ள சசிகலாவின் பெயர் பிரதான இடம் பிடித்தது.
பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சசிகலா குடும்பத்திற்கு தொடர்புடைய பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இப்படி போலி நிறுவனங்கள் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வகையில் தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.