
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், சசிகலாவின் ஜோதிடர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நேற்று காலை முதல்
நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை முடித்துக் கொண்டதாகவும், மீதமுள்ள 147 இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 30 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறையினரின் சோதனை, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது, சசிகலாவின் ஜோதிடர் இல்லத்திலேயும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகர், இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார் பிரபல ஜோதிடரான சந்திரசேகர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடராக அவர் இருந்து வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா தரப்பினருக்கு உதவியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாலை தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்து, இன்று காலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.