
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வியாழக்கிழமை இன்று காலை முதல் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
தினகரன், திவாகரன், இளவரசியின் மகள் வீடு, இளவரசியின் மகன் நடத்தி வரும் நிறுவனம், தஞ்சையில் உள்ள தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையை துவக்கி உள்ளனர். திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள தினகரனின் வீடு, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மால்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளரான மர வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதற்குக் காரணமாக, டிமானிடைசேஷன் எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு ஷெல் கம்பெனிஸ் எனப்படும் போலி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, நிதி முறைகேட்டில் இருப்பது கண்டறியப் பட்டது. அதாவது, இல்லாத நிறுவனத்தை இருப்பதாகக் காட்டி, அவற்றில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி, அந்த நிதியை வேறு வகைகளில் திருப்பி விட்டு அல்லது முறைகேடுகளுக்கு பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
சொல்லப் போனால், வடிவேலு படத்தில் வரும் ‘கிணத்தக் காணோம்’ என்று போலீஸில் புகார் கொடுத்த கதைதான்! நிறுவனமே துவங்காமல், நிறுவனத்துக்காக செலவு செய்தது போல் கணக்குக் காட்டும் முறைகேடு. இப்படி காணாமல் போன கிணத்தை... அதாவது நிறுவனங்கள் பதிவுப் பட்டியலில் பதிவு ஆகி, ஆனால் நிஜத்தில் காணாமல் போன நிறுவனங்களைத் தேடித்தான் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் இறங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சசிகலாவின் நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததால், சசிகலா தொடர்பான குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் என பல இடங்களிலும் காணாமல் போன நிறுவனத்துக்கு செலவழித்த தொகைக்கான கணக்கைத் தேடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வருமான வரித்துறையினர். இதில், சசிகலா குடும்பத்தினர் பொறுப்பில் உள்ள ஜெயா டிவி நிறுவனத்திலும் சோதனை நடக்கிறது. இந்நிலையில், ஜெயா டிவியின் சி.இ.ஓ.,வும் இளவரசியின் மகனுமான ஜெ.விவேக், தனது இல்லத்தில் நடந்த சோதனையில், இதற்கு முன்னர் காணாமல் போன தனது கைக்கடிகாரம் கிடைத்தது என்று கேலியாகச் சொன்னாராம்.
அதான்... காணாம போன கம்பெனிய தேடி வந்தவங்ககிட்ட, காணாமல் போன எனது கடிகாரம் மீண்டும் கிடைத்தது என்று கடித்திருக்கிறார் ஜெ.விவேக் என்கிறார்கள்.