
பிரபலமாக உள்ள நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று பொதுமக்கள் நம்பக் கூடாது என்றும் அப்படி நம்புவது தவறு என்றும் நடிகர் சத்தியராஜ் கூறியுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவதாக கூறி வருகின்றனர். இதனால் அரசியல் அரங்கில் நாளுக்குநாள் பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கமல் வருகிற 21 ஆம் தேதி நாளை நமதே என்ற கோஷத்துடன் அரசியலைத் தொடங்க உள்ளார். ரஜினியும், நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகிறது. நடிகர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள். ஏன் நானே 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நினைப்பது தவறு என்றார்.
நடிகர்கள் அரசியலில் தோற்றால் அதுபெரிய தோல்வியெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும். பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம் என்று அவர் கூறினார்.