
உண்மை தன்மை அறியாமல் தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியது தவறுதான் எனவும், மனிதன் இயல்பாக செய்யும் தவறைதான் நானும் செய்தேன் என பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிபிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். 5 மணி நேர காவல்துறை விசாரணைக்கு பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் மீது தொடர்ந்து பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். குறிப்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார் கூறி வருகிறார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. அப்போது பாஜக மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிபிஆர் நிர்மல்குமார் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான நிர்மல்குமாரிடம் 5 மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த அடிப்படையில் அந்த பதிவு அவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எப்படி பதிவு செய்யப்பட்டது, பதிவான செய்திக்கான ஆதாரம் ஏதும் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நிர்மல்குமாரிடம் கேட்கப்பட்டது. அந்த தகவலை பதிவிட பயன்படுத்திய செல்போனையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். மொத்தம் 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தன் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தேன், விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன், தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து துறையில் ஸ்வீட் டெண்டர் தனியாருக்கு கொடுக்கப்பட்டது அதை பாஜக சுட்டிக் காட்டியதால் தான் ஆவினுக்கு மாற்றப்பட்டது.
அதேபோல பொங்கல் தொகுப்பு முதல்வர் பயணம் என திமுக அரசின் அப்போது நடைபெற்ற குற்றங்களை பாஜக வெளிக்கொண்டு வந்தது. குறிப்பாக தமிழக மக்கள் விரோத செயல்களை வெளிக்கொண்டு வந்தோம், ஆனால் கருத்து ரீதியாக சமூக வலைத் தளத்தில் பதிவிடும் எங்கள் மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 60 புகார்கள் எங்களுக்கு எதிராக வந்துள்ளது. அதில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.அவை அனைத்தும் அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்கள், ஆனால் இந்த வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இது தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து பலமுறை மனு அளித்துள்ளோம், அரசியல் ரீதியான பதிவுகளுக்கும் கூட கிரிமினல் வழக்கு பதிவு செய்கின்றனர் தொடர்ந்து பாஜகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம்,உச்ச நீதிமன்றங்களிலும், அமித்ஷாவிடமும் புகார் அளிக்க உள்ளோம். ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை வளைத்து பாஜகவுக்கு எதிராக செயல்படுகின்றனர் என சுட்டிக் காட்டுவோம் என்றார். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பதிவிட்ட கருத்து தவறுதானே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வரின் பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் உண்மை தன்மை அறியாமல் சமூகவலைதளத்தில் அந்த செய்தியை பரப்பியது தவறுதான், மனிதன் இயல்பாக செய்யும் தவறைதான் நானும் செய்தேன், நான் பதிவு செய்தது உண்மையை போன்று இருந்ததை நம்பி பதிவு செய்தேன். ஆனால் பின்னர்தான் அது பொய் என எனக்கு தெரியவந்தது. எனவே எதை நம்பி நான் அதை பதிவு செய்தேன் என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பேன்.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான போலியான செய்திகள் பல குழுக்களாகவும், தனிநபர்களாலும் பகிரப்படுகிறது. இதை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். பாஜகவினரை ஒடுக்குவதைவிட்டு காவல்துறை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.