மோரூரில் பாமக உள்ளிட்ட கொடிகளை அகற்றியது தவறு.. அவர்களுக்காகவும் நான் போராடுவேன்..பொங்கி எழுந்த திருமாளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2021, 10:23 AM IST
Highlights

ஒரே கம்பத்தில் தனது கொடியையும், சாதி சங்க கொடியையும் ஏற்றுகிறது, இந்தியாவில் வேறு எந்த கட்சியும் அவ்வாறு சாதி அரசியலை செய்வதில்லை என விமர்சித்தார். சில காவல்துறை அதிகாரிகளுக்கு விசிகவினரை கண்டாலே பிடிப்பதில்லை, காவல்துறையின் உளவியல் தலித் விரோத உளவியலாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மோரூரில் பாமக, திமுக, அதிமுக கொடிகளை அகற்றம் செய்வது தவறானது, கண்டிக்கத்தக்கது. 

இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஜாதி அரசியலை பாமக செய்கிறது என்றும், இந்த போராட்டத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், சில காவல்  துறையின் உளவியல் தலித்  விரோத உளவியலாக இருக்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மோரூர் என்ற ஊரில் பொது இடத்தில் அனைத்து அரசியல் கட்சிக் கொடிகளும் உள்ள நிலையில், அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்துள்ளது. அந்த இடத்தில் கொடியேற்ற முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்த மாவட்ட எஸ்.பி தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடத்திய தாக்குதல் மற்றும் கொடியேற்ற அனுமதி மறுப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற தடையாக இருந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும், விசிகவினர் மீதும் 110 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் ஒடுக்குமுறை போக்கினை கைவிட வேண்டும் எனவும், ஒடுக்கப்பட்ட  மக்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம் என்றும் முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விசிகவை காவல்துறை ஒடுக்குகிறது என்றார்.

விசிகவுக்கு எதிராக நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்றார், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறினார், அதே நேரத்தில் இந்த போராட்டத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறிய அவர், பாமக ஒரே கம்பத்தில் தனது கொடியையும், சாதி சங்க கொடியையும் ஏற்றுகிறது, இந்தியாவில் வேறு எந்த கட்சியும் அவ்வாறு சாதி அரசியலை செய்வதில்லை என விமர்சித்தார். சில காவல்துறை அதிகாரிகளுக்கு விசிகவினரை கண்டாலே பிடிப்பதில்லை, காவல்துறையின் உளவியல் தலித் விரோத உளவியலாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மோரூரில் பாமக, திமுக, அதிமுக கொடிகளை அகற்றம் செய்வது தவறானது, கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காகவும் நாங்கள் போராடுவோம். ஆனால் சாதியவாதிகள் தமக்கு இரண்டு கண்கள் போனாலும், திருமாவளவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என நினைக்கிறார்கள் என கூறினார். 

 

click me!