சாதி வெறி குறித்து நீங்கள் பேசுவது ரொம்ப வியப்பா இருக்கு.. திருமாவை லெப்ட் ரைட் வாங்கும் பாஜக..!

By vinoth kumar  |  First Published Aug 2, 2022, 6:35 AM IST

கிறிஸ்துவ உணர்வை தூண்டுவதற்கு இயேசு பெயரை சொன்னால் போதும், இஸ்லாமிய உணர்வை தூண்டுவதற்கு அல்லா பெயரை சொன்னால் போதும். கிறிஸ்துவ பற்று ஏற்படுவதற்கு பைபிள் வசனங்களை சொன்னால் போதும். இஸ்லாம் பற்று வளர்ப்பதற்கு குரான் வசனங்களை சொன்னால் போதும். ஆனால், ஹிந்துக்களை ஒன்றாக திரட்டுவதற்கு சாதி வெறியை தூண்டினால் தான் திரட்ட முடியும்.


இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மையின் காரணமாகவே மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை திருமாவளவன்  உணர வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "கிறிஸ்துவ உணர்வை தூண்டுவதற்கு இயேசு பெயரை சொன்னால் போதும், இஸ்லாமிய உணர்வை தூண்டுவதற்கு அல்லா பெயரை சொன்னால் போதும். கிறிஸ்துவ பற்று ஏற்படுவதற்கு பைபிள் வசனங்களை சொன்னால் போதும். இஸ்லாம் பற்று வளர்ப்பதற்கு குரான் வசனங்களை சொன்னால் போதும். ஆனால், ஹிந்துக்களை ஒன்றாக திரட்டுவதற்கு சாதி வெறியை தூண்டினால் தான் திரட்ட முடியும். அவனுக்கு எந்த வசனமும் இல்லை. ஹிந்து மதத்திற்கு  நிறுவனர் இல்லை. தனித்தனி கடவுளை சொல்லி ஹிந்துக்களை திரட்ட முடியாது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்லணும்.. சமரச பேச்சு இருக்கக்கூடாது.. ஆளுநர் ஆர்.என்.ரவி.!

இயேசுவை ஒரே கடவுள், அல்லா ஒரே கடவுள், அவர் அருவமானவர், அவர் ஏக இறைவன், எங்கும் இருப்பார் என்று கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சொல்வது போல், ஹிந்துக்கள் யாரை சொல்வார்கள்? சிவன் என்று சொன்னால், விஷ்ணு வரமாட்டான், விஷ்ணுவை சொன்னால் முருகன் வரமாட்டான், முருகனை சொன்னால் விநாயகர் வர மாட்டான், விநாயகரை சொன்னால் கருப்பசாமி வரமாட்டான், கருப்பசாமியை சொன்னால் நொண்டி கருப்பசாமி வரமாட்டான்" என்று திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய ஒரு உரையை கேட்க நேர்ந்தது.

கிறிஸ்துவமும், இஸ்லாமும் மற்ற மதங்களை, கடவுள்களை ஏற்று கொள்வதில்லை. மற்ற கடவுள்களை சாத்தான்கள் என்றே குறிப்பிடுகின்றன. மற்ற நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்றே அழைக்கின்றன. ஆனால், ஹிந்து புனித நூல்கள் எதுவும் மற்ற மதங்கள் குறித்தோ, மற்ற கடவுள்கள் குறித்தோ, எந்த விமர்சனமும் செய்வதில்லை. மாறாக, அனைவரும் நலன் பெற்றிருக்க வேண்டும் என்றே சொல்கிறது. ஹிந்து மதத்திற்கு நிறுவனர் இல்லை என்று அவர் சொல்வது சரி தான்.  ஹிந்து மதத்திற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.  'ஆதியும் அந்தமும் இல்லாதது ஹிந்து மதம்'. சனாதன தர்மம் என்ற ஹிந்து மதத்திற்கு பொருள்  'நிலையானது' என்பதை திருமாவளவன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் ஒன்றே என்பதால்  தான் முருகனை, விஷ்ணுவை, சிவனை, கருப்பசாமியை, 'என் குலதெய்வம் நீலி அம்மாவை' உட்பட யாரை சொன்னாலும் அனைவரும் இறைவன் தான் என்ற சிந்தனையை, நம்பிக்கையை, உறுதியை தான் 'ஹிந்து என்றால் யார்?' என்பதை நம் அரசியலமைப்பு சட்டத்தை அளித்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், " யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, யார் ஒருவர் கிறிஸ்துவர் இல்லையோ, யார் ஒருவர் பார்சி இல்லையோ, அவர் ஹிந்து" என்று தெளிவாக, எளிமையாக கூறியுள்ளார். "ஹிந்து என்பது மதமல்ல, வாழும் முறை. ஹிந்து மதம் என்பது நம் மண்ணின் தர்மம், நெறி, தத்துவம், கலாச்சாரம், பண்பாடு," கல்லை, மண்ணை, செடியை, கொடியை, மரத்தை, நீரை, நெருப்பை, ஆகாயத்தை, பூமியை, காற்றை என்று இயற்கையை கடவுளாக வணங்குபவர்கள் ஹிந்துக்கள். சனாதன தர்மம் என்ற ஹிந்து மதம் சாதியை உருவாக்கவில்லை. 

இதையும் படிங்க;-  டிடிவி அணியில் இணைந்தாரா ஓபிஎஸ் ஆதரவாளர்...? அதிர்ச்சி அடைந்த அதிமுக...சையது கான் கூறிய புதிய விளக்கம்

ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள் தான் நம் கலாச்சாரத்தின் மீது படையெடுத்து, நம்மை பிரித்தாள சாதிகளை உருவாக்கின என்பதை திருமாவளவன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அவர்களின் மதங்களை வளர்ப்பதற்கு, பரப்புவதற்கு நம் இதிகாசங்களை, கலாச்சார காவியங்களை, பண்பாட்டு நெறிகளை திரித்து, சிதைத்து , குழப்பம் விளைவித்தன, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அந்த மதங்களின் ஆதிக்கமே உள்ளது. ஆனால், இந்தியாவில், பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மையின் காரணமாகவே மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை திருமாவளவன் அவர்கள் உணர வேண்டும். எந்த மதங்களை திருமாவளவன் அவர்கள் உயர்த்தி பிடிக்கிறாரோ, போற்றுகிறாரோ, அந்த மதங்கள் தான், மற்ற மத நம்பிக்கைகளை புறந்தள்ளி, தங்களின் மத நம்பிக்கைகளை உலகம் முழுதும் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதோடு சகிப்பு தன்மையற்று அடிப்படைவாதத்தை முன்னுறுத்துகின்றன என்பது வெளிப்படையான உண்மை. 

ஆகவே, மதவாதம் என்பது கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களையே சாரும். மேலும், எல்லாவற்றிற்கும் மேல், சாதி வெறி குறித்து திருமாவளவன் அவர்கள் பேசுவது வியப்பையளிக்கிறது. தமிழகத்தில் சாதி இல்லாத அரசியல் கட்சிகள் உண்டா? சாதி இல்லாத துறைகள் உண்டா? சாதி இல்லாத நிகழ்வுகள் உண்டா? சாதி இல்லாது கால சக்கரம் நகருமா?  அப்படிப்பட்ட கட்சிகளோடு தானே திருமாவளவன் அவர்கள் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை தன் கட்சி சார்பாக கொண்டு வருகிறார். பாராளுமன்ற உறுப்பினராகிறார், தமிழகத்தில் சாதி இல்லாது ஒரு அணுவும் அசையாது என்பது உலகறிந்த உண்மை. இதில் திருமாவளவன் அவர்களும் விதிவிலக்கல்ல என்பதை நாடறியும். 

கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாத்திலும் பிரிவினை இல்லையா? தீண்டாமை இல்லையா? என்பதை திருமாவளவன் அவர்களின் மனசாட்சிக்கே (இருந்தால்) விட்டு விடுகிறேன். இனியும், ஹிந்துக்கள் குறித்து அவதூறு பேசுவதை கைவிட்டு உண்மையிலேயே பாதிக்கப்படும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க முயற்சி செய்வது சிறப்பை தரும். சாதிய கொடுமைகளை அகற்றிய பாஜகவின் தாய் இயக்கமான ஆர் எஸ் எஸ் குறித்து அம்பேத்கர் அவர்களின் கருத்தை திருமாவளவன் அவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  வலிமையான தலைவர் சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது.? காங்கிரஸ் கட்சியை ஜெர்க் ஆக்கிய திருமாவளவன்!

click me!