AIADMK:அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியே.. அப்பதான் நிர்வாகிகளுக்கு பயம் வரும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

By vinoth kumarFirst Published Dec 1, 2021, 3:16 PM IST
Highlights

அதிமுக சட்ட விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

அதிமுகவிலிருந்து மூத்த நிர்வாகி அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.

இந்நிலையில், அதிமுக என்றைக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததோ அன்று முதலே கட்சித் தலைமை மீது அன்வர் ராஜா கடும் கோபத்தில் இருந்து வந்தார். ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போதெல்லாம் தனது வருத்தத்தை பகிரங்கமாகப் பதிவு செய்யவும் அன்வர் ராஜா தவறியதில்லை. இந்நிலையில்,  கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியதாகவும், அதனால் சி.வி. சண்முகம் அவரை தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

அதேபோல், அன்வர் ராஜா நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்;- கூட்டணி அமைப்பது, அதை செயல்படுத்துவது அதிமுக தலைமை சரிவர செயல்படவில்லை. சசிகலாவை சேர்த்திருந்தால் கூடுதலாக வெற்றியை பெற்றிருக்க முடியும் என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தார். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவரை அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. 

இந்நிலையில், அதிமுக செயற்குழு நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;-அதிமுக சட்ட விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதிமுகவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதியால் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ தனியாக தலைமை பதவியை கைப்பற்ற முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒரே வாக்கு மூலமே தேர்தெடுக்க முடியும் என்றார். 

மேலும், கட்சியில் இருந்து கொண்டே வெளியே விமர்சிப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். அது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவதாக அமையும். இதை அனுமதித்தால் கட்சிக்குள் புற்றிசல்கள் போல கட்டுப்பாடுகளில் சீர்குலைவுகள் ஏற்படும் எனவே அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான முடிவு  என்று அவர் கூறியுள்ளார்.

click me!