
தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மக்களவையில் நேற்று எழுப்பி அ.இ.அ.தி.மு.க. எம்.பி.கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மறுபடி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என கோஷமிட்டனர்.
சுட்டுக்கொலை
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் சென்று இருந்தனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,துப்பாக்கி சூடு நடத்தியதில், தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தால் ராமேசுவரத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது, கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை வாங்க மறுத்து மீனவர்கள் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமருக்கு கடிதம்
இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
மறுப்பு
இலங்கை அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய முதல்கட்ட விசாரணையில், இந்திய மீனவரை தங்கள் நாட்டு கடற்படையினர் சுட்டுக் கொல்லவில்லை என மறுப்பு தெரிவித்தனர்.
கடும் அமளி
இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மக்களவை தொடங்கியவுடன், அ.தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விரைவான நடவடிக்கை கோரியும் கோஷமிட்டு, அவையில் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேசிய அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் எழுப்ப கேட்டுக்கொண்டார்.
விரைவான நடவடிக்கை
கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்பி அ.தி.முக. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வேணு கோபால் பேசுகையில், “ எல்லை தாண்டி வரும் இருநாட்டு மீனவர்களை சுடமாட்டோம் என்று இந்தியா, இலங்கை நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தபிரச்சினையில் மத்தியஅரசு தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றார்.
பச்சைப்படுகொலை
வி. ஏழுமலை எம்.பி. எழுந்து இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “ தமிழக இளைஞர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது பச்சைப் படுகொலை, காட்டு மிராண்டித்தனமானது. கடந்த வாரம் கடலில் மீன்பிடிக்கச் சென்று இருந்த தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது'' என்று பேசினார்.
சரியான தருணம்
அ.தி.மு.க. எம்.பி. எம். தம்பி துரை பேசுகையில், “ இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை முடிவுக்கு கொண்டுவந்து இந்திய மக்களை பாதுகாக்கவும், இது போல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க இதுதான் சரியான தருணம். மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.