தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக இன்று டெல்லிக்கு செல்லவுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களோடு ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு- ஆளுநர் ரவி மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு புகார்களை ஆளுநர் ரவி தெரிவித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணையை தீவிரம் அடைந்த நிலையில், அவரை பதவியை விட்டு நீக்க தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் இதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் ஆளுநர் ரவியே தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரங்களிலையே தனது உத்தரவை நிறுத்தி வைத்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு- ஆளுநர் அறிக்கை
இது போன்ற மோதல் காரணமாக ஆளுநர் விருந்து நிகழ்வில் தமிழக அரசு புறக்கணித்தது. மேலும் சட்ட மசோதாக்களை ஆளுநர் மாளிகை நிலுவையில் வைத்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கிடையே ஆளுநர் ரவி 3 நாட்கள் பயணமாக இன்று காலை விமான் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட நிபுணர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் சுமார் 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்தும் சட்ட நிபுணர்களோடு ஆளுநர் ரவி ஆலோசிப்பார் என ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா.? எடப்பாடியை சந்தித்தது ஏன்.? ஜி.கே.வாசன் புதிய விளக்கம்