திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், திமுக அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களால் முதலமைச்சரை சந்திக்கக்கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய தமிழக அரசு தவறி விட்டது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 2008-10 முதல் 2011-13 வரை படித்து பட்டயம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை வழங்கப்படாததும், அதைக் கண்டித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வரும் 11-ஆம் நாள் சென்னையில் போராட்டம் நடத்தவிருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கின்றன. உரிமை வழங்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை கூட காட்டப்படாதது நியாயமல்ல.
மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதே அதிசயமாக இருந்த நிலையில், அவர்களை கற்பிக்கும் ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம் கடந்த 2004-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்பள்ளியில் 2004 முதல் 2009 வரை பயின்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின் 2008-10 முதல் 2011-13 வரை படித்தவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை. இது பெரும் சமூக அநீதியாகும்.
2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ தேர்ந்தெடுக்கவேபடவில்லை. அதற்காக அரசுத் தரப்பில் ஆயிரம் காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய தமிழக அரசு தவறி விட்டது.
மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய திமுக தலைவர் கலைஞரையும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து, இந்த கோரிக்கையை முன்வைத்த போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், திமுக அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களால் முதலமைச்சரை சந்திக்கக்கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்தது தான். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.