
எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் ஆளுகிற சக்தியாக என்றுமே மக்கள் மனதில் அதிமுகதான் உள்ளது என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கூறியுள்ளார். அதிமுகவினருக்கு மன தைரியம் அதிகம் உள்ளது என்றும், திமுகவை வீழ்த்துவது சாதாரண காரியம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர் மேடையில் உரையாற்றினார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- அதிமுகவிற்கு மன தைரியம் அதிகம் உள்ளது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஆதிக்க சக்தியாக மக்கள் மனதில் அதிமுக இடம் பெற்றுள்ளது.
திமுக ஆட்சியில் இருந்தாலும் மக்கள் அதிமுகவையே விரும்புகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிகள் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை, வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம், மீண்டும் ஆட்சியைப் பிடிப்போமா இல்லையா என்ற எண்ணம் வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த பெண்களுக்கான நல்ல திட்டங்களை நிறுத்தி பெண்களின் வெறுப்பையும் திமுக அரசு சம்பாதித்திருக்கிறது. அதிமுக திட்டங்கள் குறித்து தவறான புள்ளிவிவரங்களை கொடுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. அதிமுக திமுகவுக்கு தனியாக திட்டங்கள் எதுவும் இல்லை கருணாநிதி சிலை, மணிமண்டபம் அமைப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம். அறநிலையத்துறைக்கு திருக்கோயில் சேமிப்பு பணத்தை செலவு செய்கிறார்கள் ஆனால் 10 சதவீதம் கூட அரசாங்க நிதியை செலவு செய்யவில்லை.
ஒரே ஒரு வருடத்திலேயே மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கிய அரசு அதிமுக அரசுதான். தினந்தோறும் 5 கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையின் மூலம் திமுக அரசுக்கு சவுக்கடி கொடுத்து வருகிறார். மக்களே திமுக அரசு ஏமாற்றுவதாக பேசத் தொடங்கியுள்ளனர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை, தற்போது திமுக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை, நிதியைப் பெற முடியவில்லை, அல்லது பிரதமருடன் சண்டை என விழிபிதுங்கி கொண்டிருக்கிறது. மீண்டும் அதே இராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுக செயல்படும். திமுக எழுதுவது என்பது அதிமுகவுக்கு சாதாரண காரியம். எடப்பாடி பழனிசாமி மிகச் சிறந்த ஆட்சியை வழங்கினார்கள், பன்னீர்செல்வம் சிறப்பாகக் கட்சியை வழி நடத்தினார். பொதுக்குழுவில் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.