ஆள்பவர்கள் நாத்திக வாதிகளாக இருக்கலாம்.. இறைவணக்கத்திற்கு தடை விதிப்பது சட்ட விரோதமானது.. கொதிக்கும் H.ராஜா.!

By vinoth kumarFirst Published Dec 7, 2021, 7:32 AM IST
Highlights

கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இறைவணக்கத்திற்கு பள்ளிகளில் தடை விதித்துள்ளது சட்ட விரோதமானது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவிலிருந்து இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்தியாவில் முதல் கொரோனா கேஸ் 2020ம் ஆண்டு ஜனவரி இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், 2020 மார்ச் 24ம் தேதி அன்று நாடு முழுவதும் பொது முடக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டதால், முழு ஆண்டு தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், கல்வி ஆண்டு தொடங்கும் 2020 ஜூனிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் இயங்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. என்றபோதிலும் பிறகு 2020 டிசம்பரில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகள் வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு மார்ச்சில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதையடுத்து பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து அக்டோபர் 1ல் இருந்து, முதல் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மணி நேரம் வகுப்புகள் நடக்கும் போது, சில நிமிடங்கள் இறைவணக்கம் பாடுவதால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு இறைவணக்கத்திற்கு பள்ளிகளில் தடை விதித்துள்ளது சட்ட விரோதமானது என எச்.ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆள்பவர்கள் நாத்திக வாதிகளாக இருக்கலாம் ஆனால் அரசியல் சட்டம் வழிபாட்டுரிமை அளித்துள்ளது. எனவே தமிழக அரசு இறைவணக்கத்திற்கு பள்ளிகளில் தடை விதித்துள்ளது சட்ட விரோதமானதாகும் என  எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

click me!