பாஜகவில் இணையும் கார்த்தி சிதம்பரம்.? ராகுல் செயலால் அதிர்ச்சி..காங்கிரசில் அரங்கேறும் அடுத்தடுத்த..திக்..திக்

By Ajmal KhanFirst Published Mar 30, 2023, 10:57 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் கார்த்தி சிதம்ரம் தனது  டுவிட்டர் பதிவுகளில் நக்கலாக பதில் அளித்ததன் மூலம் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி கார்த்தி சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் சென்றதாக கூறப்படுகிறது.

சர்ச்சையும் கார்த்தி சிதம்பரமும்

தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்  மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அசைக்க முடியாத நபராக வளம் வந்தவர் ப.சிதம்பரம், இவரது மகன் கார்த்திக் சிதம்பரம், இவர் தற்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம் தொடர் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல, தனது துடுக்கான கிண்டல் கலந்த டுவிட்டுகள் மூலம் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டவர் கார்த்திக்.

ராகுலை உரசிப் பார்த்த கார்த்தி:

உதாரணமாக பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றியை நோக்கியும், காங்கிரஸ் தோல்வியை தழுவிக்கொண்டிருந்த நேரத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் மூழ்கி இருந்தனர். அப்போது கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் நெட்பிளிக்சிஸ் எந்த படம் பார்க்கலாம் எனக்கு பரிந்துரைக்கவும் என கேள்வி எழுப்பி இருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டபோது காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கேண்டி கிரஸ் விளையாட்டின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. 

எதிர்மறை கருத்துக்கள்:

இதே போல் நீட் ரத்துக்கு  எதிராக கருத்து தெரிவிப்பதும், ஆன்லைன் சூதாட்டம் தடை விதிப்பதற்கும் எதிராக பேட்டி தருவதுமாக இருந்தார். கார்த்திக்கின் இந்த செயல்பாடுகள் காங்கிரஸ் நிர்வாகிகளை மட்டுமில்லாமல் கூட்டணி கட்சி தலைவர்களையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. இது தான் கார்த்தி சிதம்பரத்தை ராகுல் கண்டுகொள்ளாமல் சென்றதற்கு உண்மையான காரணமா.? என்றால் உண்மை பின்னனி இதுவல்ல. 

நாச்சியப்பன் உறவு:

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சனம் நாச்சியப்பன் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த அவரது அண்ணன் மகனான விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் டெல்லி தலைமை லாபி துணையோடு சரசரவவென முன்னேறியதில் இருந்து ப.சி குடும்பத்திற்கு கட்சியில் பின்னடைவு தொடங்கியது. பிரபல வழக்கறிஞரான நாச்சியப்பன் டெல்லி தொடர்புகளை பலப்படுத்தி சோனியாவுக்கு நெருக்கமாக இருந்தார். அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்து ப.சிதம்பரத்திற்கு பல சிக்கல்களையும் டப் ப்பைட் கொடுத்து வந்தார். 

மாணிக்கம் தாகூரின் பாய்ச்சல்:

இது ஒரு புறம் இருக்க ராகுல் காந்தி அரசியலில் தலையெடுத்த முதல் நாள் முதல், சுதர்சனம் நாச்சியப்பன் உறவினரான மாணிக்கம் காகூர் டெல்லி அரசியலில் கோலோச்ச தொடங்கிவிட்டார். இவரது கை ஓங்க ஓங்க ப.சி குடும்பத்திற்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலின் போதும் மக்களவை தேர்தலின்போதும் ப.சி தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதற்கும், சொந்த மகனுக்கு சிவகங்கை டிக்கெட் பெறுவதற்கும் படாத பாடுபட்டார்.  மறைந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி  அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் லாபியால் மட்டுமே ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுக்கும் தனது மகனுக்கும் சீட் வாங்க முடிந்தது.  இந்த நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் பற்றி ராகுல் & கோவிடம் தொடர்ந்து போட்டுக்கொடுத்ததால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது பாரா முகம் ஏற்பட்டது உண்மைதான். 

அண்ணாமலையுடன் செல்பி:

இதெல்லாம் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலையை ஏதேச்சையாக கோவை விமானநிலையத்தில் சந்தித்த நிகழ்வை செல்பியாக எடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் வெளியே பரப்பியது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. மேலும், பாஜக பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெறும் போதெல்லாம் பல பேட்டிகளில் இவிஎம் என்னும் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெசின் தொடர்பாக புகார் எழுந்தபோதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களை கார்த்தி சிதம்பரம் சொல்லி வந்தார். 

நெருக்கும் அமலாக்கத்துறை:

இதெல்லாம் பார்க்கும் போது கார்த்தி சிதம்பரத்தின் பாசம் அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் நீதிமன்றத் தீர்ப்பால் பதவியை பறிகொடுத்த ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் உள்ளே நுழையும் போது உடல் உரசும் அளவிறகு நெருங்கி வந்த ராகுல் சடார் என கார்த்தியை பார்த்ததும்  கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டது கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்கட்சி பிரச்சனையில் மாணிக்கம் தாகூர் கை ஓங்கிய நிலையில், ராகுல் காந்தியின் இந்த அவமதிப்பால் இனி காங்கிரஸ் கட்சியில் கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் எதிர் காலம் என்னவாகும் என அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருவதாகத் தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் சிபிஐ பிரச்சனைகள் என இவற்றையெல்லாம் கூட்டி கழித்து பார்கும் போது பாரம்பரிய காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சர்யம் இல்லையென டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!