OPS vs EPS : நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!ஒற்றை தலைமை தனி தீர்மானம் தயார்...! பொருளாளர் ஆகிறாரா ஓபிஎஸ்..?

By Ajmal KhanFirst Published Jun 19, 2022, 9:51 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றறை தலைமை தீர்மானம் தயார் ?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் தொடர் குழப்பங்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்ற சில தினங்களிலேயே சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி மீண்டும் இணைந்தது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என இரட்டை தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. இந்த இரட்டை தலைமையில் சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் படு தோல்வியை அதிமுக சந்தித்தது. இதனையடுத்து ஒற்றை தலைமை முழக்கம் அதிமுகவில் எழுந்தது. இரட்டை தலைமையால் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட முடியாமல் பின்னடைவை அதிமுக சந்தித்தாக கூறப்பட்டது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தமா?

இதற்க்கு முன்னோட்டமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக குரல் எழுந்தது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். இருந்த போதும் எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ்க்கு 10 முதல் 15 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு வரை இரண்டு தரப்பும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இபிஎஸ் இல்லத்திலும்,  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திலும் ஆலோசனை நடத்தினர். இதில் ஒற்றை தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றவது குறித்து முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பொருளாளர் பதவி அல்லது அவைத்தலைவர் பதவி ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டு அமைதி காப்பாரா? அல்லது மீண்டும் தர்ம யுத்தம் தொடங்குவார? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவை விட்டே நீக்க முடியும்.. ஓபிஎஸ்ஸுக்கு தாறுமாறாக ஐடியா கொடுக்கும் மாஜி நிர்வாகி!


 

click me!