எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவை விட்டே நீக்க முடியும்.. ஓபிஎஸ்ஸுக்கு தாறுமாறாக ஐடியா கொடுக்கும் மாஜி நிர்வாகி!

By Asianet TamilFirst Published Jun 19, 2022, 9:15 AM IST
Highlights

ஓபிஎஸ் நினைத்தால், மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டே நீக்க முடியும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூடுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பு மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறது. பிரச்சனைக்குக் காரணம் ஜெயக்குமார்தான் என்று அவர் மீது தங்களுடைய கோபத்தை காட்டி வருகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதற்கிடையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் தனித்தனியாகச் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஒற்றைத் தலைமை விஷயத்தை சுமூகமாக முடிக்க அதிமுக மூத்த தலைவர்கள் முயன்று வருகிறார்கள். தம்பித்துரை, செல்லூர் ராஜூ போன்றோர் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் தனித்தனியாக சந்தித்து அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னையில் ஓபிஎஸ்ஸையும் சேலத்தில் இபிஎஸ்ஸையும் அவர்களுடைய ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதனால், சென்னையிலும் சேலத்திலும் இவர்களுடைய வீடுகளில் கட்சித் தொண்டர்கள் குவிந்திருக்கிறார்கள். சென்னையில் ஒபிஎஸ் வீடு அமைந்துள்ள சாலையில் தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், அந்த வழியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி வந்தார். அங்கு காரை நிறுத்தி தொண்டர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடமும் புகழேந்தி பேசினார்.

அவர்களிடம் புகழேந்தி கூறுகையில், “ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் தலைமை. ஓபிஎஸ் நினைத்தால், மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டே நீக்க முடியும். அப்படி அவரை நீக்குவதற்கு கட்சியின் விதிகளில் இடம் உள்ளது. முதலில் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள்தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒன்றிய, மாவட்ட, நகர செயலாளர்கள் யாரும் முடிவு எடுக்க முடியாது. தொண்டர்கள்தான் முடிவெடுக்க முடியும். ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து எடுக்க வேண்டும் என முடிவு செய்தால் இரண்டு பொதுக்குழுதான் நடக்கும். அதிமுகவில் நிலவும் ரவுடியிசத்துக்கு காரணமே ஜெயக்குமார்தான்” என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
 

click me!