பொய் சொல்வதே திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது... பாஜக ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2021, 4:04 PM IST
Highlights

தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏன்? என பாஜக செய்தி தொடர்பாளார் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏன்? என பாஜக செய்தி தொடர்பாளார் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும், தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு 10 விழுக்காடு அதிக தடுப்பூசி வழங்கியுள்ளது மத்திய அரசு என்றும் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பதும், அந்தந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்ட தொற்றின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அமைச்சர் அவர்கள் கூறுவது சரியென்றால், மக்கள் தொகை அடிப்படையில் பாஜக ஆட்சி உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு தானே அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் மகாராஷ்டிராவுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல் பாஜக ஆட்சி செய்யும் பீகாரில் அதிக மக்கள் தொகை உள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானுக்கு தான் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எங்கே பாரபட்சம் உள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.

 வயது மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கே தடுப்பூசிகளை விரைந்து செலுத்த வேண்டும் என்று இந்த விவகாரத்திற்கான அமைச்சகங்கள், மாநில அரசுகள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரே முடிவு செய்து அதற்கேற்ப ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் 18-44 வயதுக்குள்ளானோர்  அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், 45 வயதுக்கு மேலானோரே அதிக பாதிப்புக்குள்ளானார்கள் எனபதாலும், உயிரிழப்புகளில் 85 விழுக்காடு 45 வயதுக்கு மேற்பட்டோர் தான் என்பதையும், மாநிலங்களின் தடுப்பூசி செலுத்தும் சராசரி எண்ணிக்கை மற்றும் விரயமாகும் தடுப்பூசிகளை கணக்கிட்டே  அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிகின்றன என்பதை  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறேன். 

மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்து, செலுத்தப்படும் 18-44 வயதுக்குள்ளானோருக்கான தடுப்பூசிகள், மாநிலங்களில் அந்த வயதுக்குப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதே போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விலையினையும் நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் விரயத்தை தவிர்த்து வேகமாக அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்ததும், அதிக தடுப்பூசிகளை வீணடித்ததும், தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரத்தை அன்றைய எதிர்க்கட்சிகள் செய்து மக்களை தயக்கமடைய செய்ததுமே, தமிழகம் தடுப்பூசிகளை செலுத்துவதில் பின்னடைவை சந்தித்க வைத்தது என்பதையும் அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

 வருகிற ஜூன் 1 -15 வரை, தமிழகத்திற்கு 45 வயதுக்கு மேற்பட்டோருக்காக 6.55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசும், 18-44 வயதுள்ளோருக்கு 11.52 லட்சம் தடுப்பூசிகளை, தடுப்பூசி  நிறுவனங்களும் நேரடியாக  அனுப்பவுள்ளன. மேலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது ஏன்? தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏன்? முறையாக மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படாதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்வாரா? மத்திய அரசை குறைகூறுவதை நிறுத்தி விட்டு, மாவட்டங்களுக்கு  முறையான விநியோகத்தை செய்து, தடுப்பூசிகளை விரைந்து செலுத்த மாண்புமிகு தமிழக சுகாதார துறை அமைச்சர்  நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

click me!