விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? மக்களவையில் மதுரை எம்.பி அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 12:13 PM IST
Highlights

எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியித்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. 

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக்குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம்பெறவில்லை. இந்து உயர் சாதியைச்சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை ஆனால் சாதிசங்க தலைவருக்கு இடமிருக்கிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதி மொழி இங்கு இல்லையா? ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி துவங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான அய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியித்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. எனவே இந்தக்குழுவை கலைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  

 

click me!