பினராயி மீது பெருத்த ஏமாற்றம்... அமைச்சரவையில் மருமகனுக்கு இடம்... ஷைலஜா டீச்சருக்கு இடமில்லையா..?

By Thiraviaraj RMFirst Published May 18, 2021, 4:01 PM IST
Highlights

பினராயி விஜயன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் புதியவர்கள்தான் சார்,சைலஜா டீச்சருக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதுபோல் கூறுவது தவறு என பினராயி விஜயன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
 

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை எல்.டி.எஃப் கூட்டணி கைப்பற்றியது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியானது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் பதவி ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த எல்.டி.எஃப் கூட்டணி கூட்டத்தில் வரும் 20-ம் தேதி 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

சி.பி.எம் கட்சிக்கு 12 அமைச்சர்களும், சி.பி.ஐ-க்கு 4 அமைச்சர்களும், ஜனதாதள் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு அமைச்சர் வீதமும் வழங்கப்படும். பாக்கி உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 21 அமைச்சர்களுக்கான துறை குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பினராயி விஜயனின் இரண்டாவது ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் புதுமுகமாக இருப்பார்கள் எனவும், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சரவை குறித்து தகவல்கள் வெளியானது. ஏனென்றால் கடந்த எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக செல்வாக்குமிக்கவராக இருந்தவர் கே.கே.சைலஜா டீச்சர். ஓகி புயல், மழை வெள்ள பிரளயம், நிப்பா வைரஸ், கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றவர் அவர். கே.கே.ஷைலஜா டீச்சர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்படுகிறார். புதிய அமைச்சரவையில் பழைய அமைச்சரவையின் நீட்சி இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் இந்த மாற்றம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதற்கு விளக்கமளித்துள்ள கம்யூனிஸ்டு கட்சி, ’’கொள்கைப்படி அமைச்சர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது. அதனால்தான் இந்த மாற்றம்’’ எனக் கூறுகின்றனர். அப்படியானால் முதலமைச்சராக பினராயி விஜயன் மட்டும் எப்படி இரண்டு முறைப் பொறுப்பேற்கலாம்?’ என்கிற விமர்சனம் எழுந்துவருகிறது. மற்றொருபக்கம் கோழிகோட்டின் பேய்ப்போர் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற பினராயி விஜயன் மருமகன் பி.ஏ.முகமது ரியாஸுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

பினராயி விஜயன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் புதியவர்கள்தான் சார்,சைலஜா டீச்சருக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதுபோல் கூறுவது தவறு என பினராயி விஜயன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

click me!