உயிரையும் துச்சமென மதித்து சேவை செய்யும் மருத்துவர்கள் தான் உண்மையான கடவுள்கள்.. உணர்ச்சி பொங்கும் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published May 18, 2021, 3:22 PM IST
Highlights

கொரோனா சிகிச்சையின் போது நோய் தொற்றிக் கொண்டதால் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏராளம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சையின் போது நோய் தொற்றிக் கொண்டதால் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏராளம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,78,719 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244  மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 50 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள் தான் கடவுள் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 40 ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம். நோயால் பாதிக்கப் பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வருவார்கள்.  ‘‘அய்யா நீங்கள் தான் எங்களுக்கு கடவுள் மாதிரி. நீங்க தான்யா இந்த உயிரை காப்பாற்ற வேண்டும்’’ என்பார்கள்.

இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் உயிரையும் பணயம் வைத்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தான் உண்மையான கடவுள்களாக பார்க்கப்படுகின்றனர். அந்தக் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவம் அளித்தால் போதுமானது. சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு எந்த ஆபத்தோ, அச்சுறுத்தலோ இல்லை. 

ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கும் நோய் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. கொரோனா சிகிச்சையின் போது நோய் தொற்றிக் கொண்டதால் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏராளம்.... ஏராளம். இவ்வளவையும் கடந்து கொரோனா பாதித்த மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவம் அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்... அவர்களை வணங்குவோம் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

click me!