கொரோனா களத்தில் ஒவ்வொருவரும் போர்ப்படைத் தளபதிகளே.. மாவட்ட அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி உரை.

By Ezhilarasan BabuFirst Published May 18, 2021, 2:17 PM IST
Highlights

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவது நமது கடமை என்றும், குறிப்பாக  கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவது நமது கடமை என்றும், குறிப்பாக  கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடும் ஒவ்வொரு அதிகாரியும் ஒரு போர்ப் படைத் தளபதிக்கு சமம் என அவர் வர்ணித்துள்ளார். 

கொரோனா மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடினார். கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான பல அதிகாரிகளின் அனுபவங்களை அரிய அவர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11: 50 மணிக்கு உரையாடல் நிகழ்த்தினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல அதிகாரிகள் களத்தில் நின்று சிறப்பான தீர்வுகளை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த அதிகாரிகளின் யுக்திகளை அறியும் வகையிலும், அவர்களின் வியூகங்களை கேட்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கர்நாடகா, பீகார், அஸ்ஸாம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் மிகக்கடுமையாக பாதித்த 46 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமரின் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் சில மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடியதாவது :  கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் போர்படைத் தளபதிகள்தான், கொரோனாவை கையாள்வது தொடர்பாக உங்கள் நல்ல அனுபவங்களை, வியூகங்களை எனக்கு தெரிவியுங்கள், அதை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாரும்பட்சத்தில் இதை மற்ற மாவட்டங்களில் எப்படி பயன்படுத்துவது என்று நாம் சிந்திக்கலாம்.  உங்கள் ஒவ்வொருவரின்  கண்டிபிடிப்பாலும் நாடு பயனடையும். பி.எம்கேர் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலை அமைக்க விரைவான பணிகள் நடைபெற்று வருகிறது. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் ஆலைகள் இயங்க தொடங்கியுள்ளன, இந்த ஆக்சிஜன் ஆலைகள் ஒதுக்கப்பட உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தயார்படுத்துங்கள். இது ஆக்சிஜன் ஆலைகளை விரைவாக அமைக்க வழிவகுக்கும்.

இது ஆக்சிஜன் கண்காணிப்பு குழுவிற்கு பேருதவியாக அமையும்,  தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை அழிக்க வேண்டும், எத்தனை பேருக்கு தடுப்பூசி தேவை என்பது உங்களுக்குதான் நன்கு தெரியும், எனவே 15 நாட்களுக்கு முன்பாகவே அதற்கான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள், தற்போது தடுப்பூசி விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்துகள் மற்றும் கொரோனாவுக்கு தேவையான மருத்துவ பொருட்கள் பதுக்கல், மற்றும் கள்ள சந்தைகளில் விற்பதை  தடுத்து அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். பல கிராமங்களில் மக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்,  ஒரு கிராமத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே வெளியே சென்று கிராமத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுவந்து விநியோகிக்கிறார்கள், கொரோனாவுக்கு எதிரான போரில் உங்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விங் கமாண்டர்ஸ், இந்த கொரோனா போர்க்களத்தில் நீங்கள் முக்கிய தளபதிகள். 

இந்த களத்தில் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யுங்கள். கொரோனா படுக்கை, மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவை தொடர்பாக மக்களுக்கு தகவல்களை துல்லியமாக வழங்குங்கள், மருத்துவமனையில் எங்கே எத்தனை படுக்கைகள் உள்ளன, என்பது போன்ற தகவல்களை மக்களுக்கு துல்லியமாக கிடைக்க செய்யுங்கள். குறிப்பாக முன் களப்பணியாளர்கள் மன உறுதியுடன் பணியாற்ற துணை நில்லுங்கள். உங்கள் மூலமாக அவர்கள் புத்தாகத்தையும், நம்பிக்கையும் பெறவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தனித்துவமான சவால்கள் உள்ளது, குறிப்பாக கொரோனாவில் இருந்து கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உங்கள் மாவட்டத்தில் சவால்களை நீங்கள் நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள், உங்கள் மாவட்டம் வெல்லும்போது நாடு வெல்லும், உங்கள் மாவட்டம் கொரோனாவை தோற்கடிக்கும் போது நாடு கொரோனாவை தோற்கடிக்கும், எனவே கொரோனா இல்லாத கிராமங்களை நாம் உருவாக்க வேண்டும்.  கிராமங்களுக்குள் கொரோனா நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த உறுதிமொழியை கிராம மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

நாம் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது, பல மாநிலங்களில் அவை அதிகரித்து வருகின்றன, தரவுகள் குறைந்து வந்தாலும் நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவது நமது பொறுப்பு, கடந்த ஒரு வருட காலமாக நான் மேற்கொள்ளும் கூட்டங்களில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவது நமது பொறுப்பு என நான் கூறி வருகிறேன். நோய்த்தொற்று பரவல்,  தடம் அறிதல், குணப்படுத்துதல், போன்றவற்றை நாம் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். உங்கள் அனுபவங்கள் மக்களை காக்க உதவும், கிராமங்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், கட்டுப்பாடுகள் மூலம் ஏழை மக்களை தொந்தரவு படுத்துவதை தவிர்க்க வேண்டும், மாவட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் எளிதான வாழ்க்கை முறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், தொற்றுநோய் தடுக்கப்படவேண்டும் அதேநேரத்தில் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு அன்றாட வினியோகத்தை தடையின்றி பராமரிக்கப்பட வேண்டும்.

தடுப்பூசி என்பது கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாகும், தற்போது அட்டவணையில் உள்ள மாநிலங்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி கிடைக்க வேண்டும், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்,  அதே நேரத்தில் தடுப்பூசி கழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதும் உங்களுக்கு தெரியும், மழைக்காலத்தில் உங்கள் சவால்கள் அதிகரிக்கும் என்பதைவிட உங்கள் மன உறுதியின் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். மழை காரணமாக மருத்துவமனைகளில் மின்சாரம் இருத்தல்  போன்றவற்றை நிர்வகிக்க இப்போதிலிருந்தே சிந்திக்க வேண்டும்.  சிறந்த நோக்கத்துடனும், ஊக்கத்துடனும், நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்போம். உங்கள் அனுபவங்கள் நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முழு ஒத்துழைப்பு, திறமையான தலைமை மற்றும் நிர்வாகத்திறனால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வலுவாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!