இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் கடைகளில் எதுவும் வழங்கப்படாதா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Oct 13, 2021, 4:11 PM IST
Highlights

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை

திமுக வெள்ளை அறிக்கை வெளியிடும்போதே நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசு உதவிகள் உரியோர்களுக்கு மட்டும்  சென்றடைய வேண்டும். அரசு உதவி பெரும்பணக்காரர்களுக்கும் சென்றடைகிறது. அது தொடர்பான கணக்குகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளோர், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வெளியான செய்திக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம் எனத் தெளிவுபடுத்தப் படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிவரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது’’ எனக்கூறப்பட்டுள்ளது.

click me!