
சசிகலாவுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறைக்கு, தமிழக அரசு மின்னஞ்சலில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தை கர்நாடக சிறைத்துறை இன்று பரிசீலனை செய்யும் என்றும், சசிகலா இன்று மாலை பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்த நிலையில், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக, சிறையில் இருக்கும் சசிகலா பரோலுக்காக சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தார்.
அதில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு பரோல் கேட்டிருந்தார். இதைதொடர்ந்து மனுவில் குறைபாடுகள் இருப்பதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களுடன் மீண்டும் பரோல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கணவர் நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து மீண்டும் பரோல் கோரி மனு அளித்துள்ளார் சசிகலா.
இந்த நிலையில், சசிகலாவுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை, தமிழக அரசுக்கு சில தகவல்களை கேட்டிருந்தது. அதன் அடிப்படையில், சசிகலா பரோல் தொடர்பாக தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த கடிதத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உறுதிபடுத்தும் விதமாகவும் மற்றும் பல்வேறு விஷயங்கள் அந்த கடிதத்தில் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இந்த கடிதத்தை தமிழக காவல்துறை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளது. தற்போது அந்த கடிதம் கர்நாடக போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காவல் துறையின் கடிதம் கிடைத்ததை அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து, இன்று மதியம் கர்நாடக சிறை துறையின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தின்போதுதான் பரோல் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் பரோலில் வெளிவரும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. அதாவது, உடல்நலமின்றி மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராசனைத் தவிர வேறு யாரையும் சந்திக்கக் கூடாது என்றும், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் ரீதியான நபர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்படும அல்லது அதற்கும் குறைவான நாட்கள் பரோல் வழங்கப்படுமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இன்று பிற்பகல் 3 மணி அளவில் சசிகலா பரோலில் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.