மறைந்த மதுசூதனின் மொத்த மருத்துவ செலவு தொகை இவ்வளவா.? ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 6:13 PM IST
Highlights

இந்நிலையில் இ. மதுசூதனன் அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவு தொகை 26,74,063  ரூபாயை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கணக்கிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அதிமுக தலைமைக்கழகம் ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது (81) வயது மூப்பின் காரணமாக, உடல் நிலை குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர் ஓய்வில் இருந்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெண்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கை பதிவு செய்தார் கொரோனா பரவல் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வந்த அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் காலமானார்.  இது அதிமுக தொண்டர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான மரியாதைக்குரிய திரு. மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5-8-2021 மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில் இ. மதுசூதனன் அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவு தொகை 26,74,063  ரூபாயை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கணக்கிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!