ஓபிஎஸ்., அணி வேட்பாளருக்கு தோல்வியா? என்ன சொல்கின்றனர் அதிமுக.,வினர்? 

First Published Dec 24, 2017, 3:05 PM IST
Highlights
is rk nagar loss meant for ops group what are they saying about admk candidate defeat


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை முதலே குவிந்தனர் அதிமுக.,வினர்.  இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரனே முன்னிலை பெற்று வந்தார். 

முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனும், மூன்றாம் இடத்தில் பல கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக., வேட்பாளர் மருது கணேஷும் வந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில், தினகரன் பெற்று வரும் வாக்குகள், மற்ற அனைத்து வேட்பாளர்களின் ஒட்டு மொத்த வாக்குகளின் எண்ணிக்கையையும் விட அதிகம். அதைவிட, அதிமுக., வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகிறார் தினகரன். 

இந்நிலையில், இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற வாக்கைப் பொய்யாக்கியுள்ளது இந்தத் தேர்தல். ஏற்கெனவே கட்சியின் முதல்வர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் போட்டியிட்டும் கூட, ஆளும் தரப்பால் கணிசமான வாக்குகளைப் பெற இயலவில்லை. ஆனால், இந்தத் தேர்தலுக்காக, வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே வண்டியில் ஏறி பிரசாரம் செய்தார்கள். 

இந்நிலையில், இத்தகைய தோல்வி குறித்து பெரும் அதிருப்தி நிலவுகிறது அதிமுக,வினரிடம்! ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமை அலுவலகம் வெறிச்சோடிப் போனது. ஆக, இந்தத் தோல்வி முதலமைச்சருக்கான தோல்வி என்று அதிமுக.,வில் பரபரப்பான பேச்சு எழுந்திருக்கிறது. 

காரணம், இரு அணிகளாக இருந்த அதிமுக.,வினர் ஒரு நிர்பந்தத்தின் பேரில் இணைந்தனர். கட்சிப் பொறுப்பும் ஆட்சிப் பகிர்வும் நன்றாகவே அமைந்தது. ஆனாலும், காலம் கடந்த நிலையில், இன்னும் மன ரீதியாக அதிமுக.,வில் இணையவில்லை என்று முதல் குரல் கொடுத்தார் அதிமுக., எம்.பி. மைத்ரேயன். அதற்குப் பின்னணியில் என்ன காரணம் இருந்தது என்பது, பின்னாளில் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின் போது வெளிப்பட்டது. 

தேர்தல் அறிவிப்பு வந்ததும், வேட்பாளர் தேர்வு குறித்து அலசப்பட்டது. முன்னதாக, ஓ.பி.எஸ் அணியில் இருந்து போட்டியிட மதுசூதனனே இம்முறையும் இரு அணிகளும் இணைந்த பின்னும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், வேண்டுமென்றே அப்போது அணிக்குள் போட்டிக்கு ஏற்பாடானது. யார் போட்டியிடுவது என்பது குறித்து விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரு அணிகளில் இருந்தும் போட்டிக்கு நபர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் ஒருவழியாக சமரசம் பேசப்பட்டு, மதுசூதனன் போட்டியிட தயார் செய்யப் பட்டார். 

இந்நிலையில், இத்தகைய தோல்வியை அதிமுக., எதிர்கொண்டுள்ளது அதிமுக.,வின் இரு அணி விசுவாசிகளிடையேயும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியை எப்படி அணுகுகிறார்கள், இது ஓபிஎஸ் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதலாமா என்று பெயர் சொல்ல விரும்பாத அதிமுக., தலைவர்களில் ஒருவரிடம் பேசினோம். அவர் ஓ.பி.எஸ் அணியின் தூணாக விளங்கியவர். 

நிச்சயமாக இது ஓபிஎஸ் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, முக்கியமாக அரசுக்கு, முதல்வருக்கு ஏற்பட்ட தோல்வி என்றே சொல்லலாம்.  பணம் விநியோகம் செய்ததாகக் கூறப்பட்டதில், அமைச்சர்களே தொடர்பு படுத்தப் பட்டதாகக் கூறப்பட்டது. எனவே, இது அவர்களின் தோல்வி. எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்கும் வந்தார். அவர், தனியாக பிரசாரம் செய்யவில்லை. அது போல், ஓபிஎஸ் மட்டும் தனியாகப் பிரசாரம் செய்யவில்லை. இருவரும் இணைந்தேதான் பிரசாரம் செய்தார்கள். 

முதல்வர் எடப்பாடி அப்படி நினைத்திருந்தால் அவர் தனி ஒருவனாகவே பிரசாரம் செய்திருக்கலாம். சொல்லப் போனால், முன்பு போல இரட்டை விளக்கு மின் கம்பத்துக்கு நின்றிருந்தால் கூட,  வெற்றி பெற்றிருக்க முடியும்.  ஆனால், மதுசூதனனுக்கு இரு பக்கத்திலும்  இருவராக நின்று தான் மக்களை சந்தித்தார்கள். தான் தனியாக இல்லாமல் உடனேயே வந்துதான் பிரசாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே இது ஒட்டுமொத்தமாக முதல்வர் ஏற்க வேண்டிய தோல்விதான் என்றார் அவர். இதையேதான் பலரும் பிரதிபலிக்கின்றனர். 

இன்று காலை முதலே தேர்தலில் இரண்டாமிடம் வந்து தோல்வி குறித்த செய்திகள் வந்ததுமே, அமைச்சர்கள் பலரும் தங்கள் செல்போன்களை ஆஃப் செய்துவிட்டு, அமுக்கமாக இருந்துவிட்டார்களாம். முதல்வரின் எல்லைக்குள் நாட் ரீச்சபிளாக அமைச்சர்கள் இருந்ததால், ஊகங்கள் ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கின. 

ஒன்று பட்டு தேர்தலை எதிர்கொண்டவர்கள்தான்! ஆனால், இப்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்து மோதல்களால், மீண்டும் ஒரு பிளவு வரும் சாத்தியக் கூறுகள், அதிமுக.,வினர் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாகத் திகழ்கிறது. 
 

click me!