சீனா கைப்பற்றிய பகுதிகளை மோடி அரசு மீட்கப்போகிறதா..? இல்லை கடவுளில் செயல் என கை கழுவபோகிறதா.? ராகுல் கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2020, 1:09 PM IST
Highlights

இரு நாட்டு வீரர்களும் சம அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இருந்தாலும், பாங்கொங் த்சோ ஏரியின் தென்கரை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களை இந்திய ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில்,  ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய நிலத்தை சீனா கையகப்படுத்தியுள்ளது என்றும், அந்த நிலத்தை மீட்க மத்திய அரசு முயற்சி  மேற்கொள்ள போகிறதா?  இல்லை அது தெய்வத்தின் செயல் என கைவிடப் போகிறதா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய-சீன எல்லையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது,  கடந்த ஜூன் 15ஆம் தேதி  இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, சீன ராணுவம் நடத்திய வன்முறை தாக்குதலில், 9 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது, எல்லையில் இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இருநாடுகளும் எல்லையில் இருந்து படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டன. சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை சீனா பின்வாங்கின. ஆனால் பல்வேறு பகுதிகளிலிருந்து சீனா படைகளை பின் வாங்க மறுத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கின் பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். 

இது குறித்து தெரிவித்த பாதுகாப்பு துறை வட்டாரங்கள், பாங்கொங் த்சோவின் தெற்கு பகுதியில் இரு நாட்டு வீரர்களும் அதிக அளவில் எதிர் எதிர் திசையில் குவிக்கப்பட்டிருந்தனர், இரு தரப்பினரும் நவீன ஆயுதங்களுடன் களத்தில் உள்ளனர், எல்லையில் சீன வீரர்கள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர். ஆனால் நம் வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்டு வீரர்களும் சம அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இருந்தாலும், பாங்கொங் த்சோ ஏரியின் தென்கரை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களை இந்திய ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவத்தின் நகர்வுகளை இந்திய வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ரஷ்யாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  இந்தியா,  சீன ராணுவத்தின் அத்துமீறலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது. ஆனால் சீனா, இந்திய ராணுவம்தான் முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், இரு நாடுகளும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில்  இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்து  வருகிறது. 

எல்லைவிவகாரத்தில் தொடர்ந்து ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக சரமாரி கேள்விகளை முன்வைத்து வருகிறார். ஏற்கனவே இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ்,  வேலைவாய்ப்பின்மை, தனியார்மயமாக்கல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு,  பொருளாதார மந்தம் மற்றும் தேர்வுகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.  அதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில்,  தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி, வரும் நாடாளுமன்ற கூட்டத்தை ஸ்தம்பிக்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் சீன ஊடுருவல் பிரச்சினையை பெரிதாக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  இந்நிலையில் அதற்கு அச்சாரமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லை விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது சீனப் படைகள் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன, அப்பகுதிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க போகிறதா?  அல்லது இதுவும் கடவுளின் செயல் என கூறி அதைத் தட்டிக் கழிக்க போகிறதா?  என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.  ஏற்கனவே எல்லை விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வரும் நிலையில்,  தற்போது மீண்டும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருவது குறிப்பிடதக்கது.
 

click me!