ஊற்றி மூடப்படுகிறதா ஜெயலலிதா பல்கலைக்கழகம்..? நீதிமன்றத்தின் உதவியை நாடிய அதிமுக மாஜி அமைச்சர்.!

By Asianet TamilFirst Published Jul 20, 2021, 8:36 PM IST
Highlights

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை  செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 

அதிமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிவந்தார். இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதி செய்யவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.


அந்த மனுவில், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டது. விழுப்புரத்தைத் தலையிடமாகக் கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக கட்டுமானத்துக்கு விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் ஒத்துக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கியும் தற்போதைய அரசின் புறக்கணிப்பால், பல்கலைக்கழகம் பழைய தாலுக்கா அலுவலகத்திலேயே செயல்படுகிறது.


இதுவரை பல்கலைக்கழகத்திற்குப் பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்குத் தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!