பாஜகவுக்கு முட்டுகொடுத்துட்டு இப்போ கேள்வி கேட்கிறீங்களே நியாயமா.? எடப்பாடியை டாராக கிழித்த முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Sep 13, 2021, 12:58 PM IST
Highlights

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய வினாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அளித்த பதில்  பின்வருமாறு:- 

நீட் தேர்வை தடுத்து நிறுத்தி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.  ஏன் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை, ஆனால் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வு  தமிழ்நாட்டில் முதன் முதலில் நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதுதான். 

நீட் தேர்வு அச்சத்தில் அனிதா உட்பட மாணவ மாணவிகள் தற்கொலை  செய்துகொண்டது உங்கள் ஆட்சியில்தான், குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்கு சொல்லாமல் மறைத்தது அதிமுக ஆட்சிதான், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தான் இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள், இப்போதும் இருக்கிறீர்கள், சிஐஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாஜக ஆரதவு கோரியபோது நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என்று அதிமுக நிபந்தனை வைத்திருக்கலாம்.

ஆனால் அந்த தெம்பு, திராணி அதிமுகவிற்கு இல்லை. அதைச் செய்திருந்தால் நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விளக்கு கிடைத்திருக்கும், ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்த போது மரண அமைதி காத்து ஆட்சி நடத்தியது தான் அதிமுக. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம், சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்த இருக்கிறேன், ஆகவே நீட் தேர்வை ரத்து செய்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு பதிலாக சொல்லி அமைகிறேன். இவ்வாறு ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்றத்தில் பதிலடி கொடுத்தார். 
 

click me!