ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மட்டும் தனி சலுகையா.? ஸ்டாலின் முடிவை கடுமையாக எதிர்க்கும் கார்த்தி சிதம்பரம்!

By Asianet TamilFirst Published May 21, 2021, 9:55 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மட்டும் தனியாக சலுகை வழங்குவதை ஏற்க முடியாது என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மூட நம்பிகை, வதந்திகள் என எதையும் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழியாகும். சட்டரீதியாக ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 25 முதல் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்கலாம் என இருந்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மட்டும் சலுகை வழங்குவதை ஏற்க முடியாது. தமிழக சிறைச்சாலைகளில் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனையை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற கொள்கை முடிவு எடுத்து, அதன் மூலம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் அதை நாங்கள் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டோம். நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை எல்லாம் ஹீரோவாக்க வேண்டாம். 
ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி மட்டும் இறக்கவில்லை. அவரோடு சேர்ந்து 16-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்த்து கருத்து தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

click me!