முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 21, 2021, 7:09 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 41 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சீனியர் அமைச்சர்களுக்கு மீண்டும் போயிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த பலரும் அதிமுக மீதும், ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதிலும் அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ​
கூறிய குற்றச்சாட்டு பகீர் கிளப்பியது. 

அதாவது திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரான அமைச்சர் கே.சி.வீரமணி தான் திட்டமிட்டே தனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டார் என்று குற்றச்சாட்டினார். மேலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் இடையே மாமன், மச்சான் போல் உறவும், ரகசிய உடன்பாடும் இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பினார். 

வேலூர் மாவட்டத்தை பிரித்ததில் இருந்தே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் நிலோபர் கபில் கூறிய குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாத தலைமைக்கழகம், தற்போது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலை கட்சி அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். 

அதிமுகவின் கொள்கை, குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகக்யில் செயல்பட்டதாகவும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு உறுப்பினர், மாவட்ட கழக துணைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அவருடன் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 
 

click me!