அரசு குடியிருப்புக்கு மாறுகிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..? சித்தரஞ்சன் தாஸ் சாலை டூ கிரீன்வேய்ஸ் சாலை..!

By Asianet TamilFirst Published May 13, 2021, 9:43 AM IST
Highlights

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் தாஸ் சாலையிலிருந்து அரசு பங்களாக்கள் அமைந்துள்ள கிரீன்வேய்ஸ் சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாறுவார் என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன.
 

தமிழக முதல்வராக இருந்தவர்களில் சென்னையில் வசித்த கருணாநிதி கோபாலபுரம் வீட்டிலிருந்தே சட்டப்பேரவைக்கு சென்று வந்தார். எம்.ஜி.ஆர். ராமாவரம் வீட்டிலிருந்தும், ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டிலிருந்தும் சட்டப்பேரவைக்கு சென்று வந்தனர். ஆனால், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில்தான் வசித்துவந்தார். அவருடைய சொந்த ஊர் சேலம் என்பதால், அரசு பங்களாவை பயன்படுத்தினார். இதேபோல முதல்வர், துணை முதல்வர் பதவிகளை வகித்துள்ள ஓ.பன்னீர்செல்வமும் அரசு பங்களாவில்தான் வசித்தார்.
சென்ற சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் தாஸ் வீட்டிலிருந்துதான் சட்டப்பேரவை மற்றும் கட்சி அலுவலங்களுக்கு சென்று வந்தார். ஆனால், முதல்வரான பிறகு ஆழ்வார்பேட்டையிலிருந்து எல்டாம்ஸ் சாலை வழியாக கட்சி அலுவலகம் செல்லாமல், டிடிகே சாலை வழியாக வந்து கட்சி அலுவலகதுக்கு மு.க. ஸ்டாலின் சென்று வருகிறார். எல்டாம்ஸ் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதாலும், நடைபாதை கடைகள் அதிகம் என்பதாலும், முதல்வர் வந்து செல்லும்போது பாதுகாப்பு பணியால் வியாபாரிகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால், இந்த முடிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்தரஞ்சன் தாஸ் சாலையிலிருந்து கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வருடன் பதவியேற்ற 33 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட உள்ளன. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அரசு பங்களாக்களை காலி செய்துவரும் நிலையில், பங்களாக்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. கடந்த 2006-இல் திமுக ஆட்சி ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர், பின்னர் துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில்தான் வசித்தார். 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு சொந்த வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
தற்போது அந்த வீட்டில் முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்துவருகிறார். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சித்தரஞ்சன் தாஸ் சாலையிலிருந்து கிரீன்வேய்ஸ் சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு மாறுவார் என்று திமுக வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன. தற்போது குறிஞ்சி இல்லத்தில் வசிக்கும் முன்னாள் சபாநாயகருக்கு தனபாலுக்கு வீட்டை காலி செய்ய 2 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் காலி செய்த பிறகு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பின்னர், அந்த வீட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாறுவார் என தகவல்கள் வருகின்றன. அப்படி இல்லாவிட்டால் முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தவும் செய்வார் என்று மாறுபட்ட தகவல்களும் வருகின்றன.

click me!