சட்டசபையின் மொத்த குத்தகை ஜெயலலிதா - அலறிய எதிர்கட்சியினர்... ருசிகர தகவல்

First Published Dec 8, 2016, 3:04 PM IST
Highlights


அதிமுக தலைமைக்கு சட்டென வந்துவிடவில்லை ஜெயலலிதா , சோதனை நெருப்பாற்றில் நீந்தி புடம்போட்டு கூரிய ஆயுதமாய் எதிரிகளை சொல்லம்புகளால் குத்தி கிழித்தவர். சட்டசபையில் தாக்கப்பட்டு தலைவிரி கோலமாய் வெளியேறிய ஜெயலலிதா தலைவியாய் அதே சட்டசபையை தான் மறையும் தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தவர்.

சட்டசபையில் ஜெயலலிதா இருக்கிறார் என்றால் தலைமை ஆசிரியரே வகுப்பில் பாடம் எடுக்க வந்தது போல் மாணவ மனநிலையில் அனைத்து உறுப்பினர்களும் இருப்பர். சட்டசபையில் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு பல உதாரணங்களை சொல்லலாம் என்கின்றனர் உறுப்பினர்கள். 

ஒரு எதிர்கட்சி உறுப்பினர் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டால் அவருக்கு துறை அமைச்சர் என்ன பதில் அளிப்பார் என ஜெயலலிதா கவனித்தபடியே இருப்பார். அதில் சுணக்கம் இருந்தால் உடனடியாக அவரது கண்கள் சட்டசபை செயலர் ஜமாலுத்தீனை நோக்கும். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட குறிப்புகளை அளிக்க தக்க விளக்கத்தை அளிப்பார் ஜெயலலிதா. 

இதே போல் ஜெயலலிதாவிடம் வாயை கொடுத்துவிட்டு பதிலளிக்கமுடியாமல் உட்கார்ந்த எதிர்கட்சியினர்தான் ஏராளம். அவரது வார்த்தையில் சுளீர் விமர்சனம் இருக்கும் ஆனால் மறந்தும் மரியாதை குறைவாக பேச மாட்டார். திரு என்ற அடைமொழி இல்லாமல் யாரையும் பெயர் குறிப்பிட்டு கூறமாட்டார். 

சட்டசபையில் அனைத்து மொழிகளிலும் பேசி அசத்துவார். கடந்த 2011 ஆம் ஆண்டு  காங்கிஸ் சட்டமன்ற உறுப்பினர் அவருக்கு தமிழ் வராது தெலுங்கு பேசும் பகுதியிலிருந்து வந்தவர் , அவருக்கு தெலுங்கிலேயே பேசி பதிலளித்தார். இதே போல் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஒரு தகவலை கூறி சபையில் பெரிதாக அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். 

துறை அமைச்சர் சரியாக பதிலளிக்கவில்லை. அவைக்கு அப்போதுதான் வந்த ஜெயலலிதா அவருக்கு பதிலளித்தார். அவரை கிடுக்கி பிடி போட்டு மடக்கினார். ஜெயலலிதாவின் கிடுக்கிபிடி கேள்வியால் ராஜாவால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் ராஜா தனது தவறை மறைக்க ஆங்கிலத்தில் சட்டென்று மாறி அதே விஷயத்தை கூறி சமாளிக்க பார்த்தார். 

ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் ஜெயலலிதா சிரித்தபடியே எழுந்து மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என்று மடக்கினார். முதல்வர் சிரித்தபடி கூறியதால் அப்பாடா தப்பித்தோம் என்று அந்த உறுப்பினரும் அமர்ந்தார். 

இதே போல் ஜெயலலிதாவிடம் தவறாக ஒரு விஷயத்தை சபையில் பதிவு செய்து யாரும் தப்பிக்க முடியாது. உடனுக்குடன் அவர்களுக்கு எழுந்து பதிலளித்து விடுவார். சபையில் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் போது கன்னிப்பேச்சு பேசும் உறுப்பினர்களை தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துவார். 

அவர்கள் பேச்சை அதில் தவறிருந்தாலும் ரசித்து கேட்பார். பின்னர் அவர்கள் ஆசிர்வாதம் வாங்க வரும்போது சிரித்தபடியே பாராட்டி அனுப்புவார். முக்கியமாக பெண் உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்பார். 

சட்டசபையில் ஜெயலலிதா இருக்கும் போது , இல்லாத போது என இருவகையாக பிரிக்கலாம் அந்த அளவுக்கு ஒரு ஆளுமையுடன் சபையை நடத்தியவர் . எல்லாம் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். திமுக உறுப்பினர்கள் கூட அவர் இருக்கும் போது தேவையற்ற செயல்களில் ஈடுபட தயங்கும் அளவுக்கு சபையை நடத்தியவர்.

click me!