
பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புதிய பிரத்யேக இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
350 திட்டங்கள்
இந்த இணையதளத்தை செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதில் பெண்கள் நலம் பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
4 பிரிவுகள்
இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம், எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன.
குறை தீர்ப்பு பிரிவு
இணையதளத்தில் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறை தீர்க்கும் பகுதியும் தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், மாநிலங்களில் உள்ள பெண்கள் உதவி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
பெண்களின் வேலைவாய்ப்புக்கான தேடலும் இதில் உள்ளது. நேர்காணல்கள், முதலீடு, சேமிப்பு ஆகியவை குறித்த அறிவுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
உடல்நலன்
பொதுவான நலத்திட்டங்கள் தாண்டி, ஊட்டச் சத்துக்கான குறிப்புகள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள், ஆபத்தான நோய்கள் குறித்த தகவல்கள் ஆகியவையும் இதில் அடக்கம்.
ஆங்கிலம்-இந்தி
இவை தவிர வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கும் வழிமுறைகள், பாஸ்போர்ட் பெறுவது ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது