அண்ணாமலை குறித்து அமித்ஷாவுக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்?? துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு.!

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2021, 1:54 PM IST
Highlights

இதே பாணியில் பல பிரச்சனைகளை அவர் தன்மையுடன் கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் அண்ணாமலை பல விஷயங்களில் அதிரடியாக செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிர்ப்புகளும் அதிகளவில்  உள்ளது. 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க அமித் ஷா பரிந்துரைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சிங்கம் படம் சூர்யாவை போல ரியல் சிங்கமாக செயல்பட்டு அம்மாநில பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபல காவல் அதிகாரியாக வலம் வந்தவர் கே.அண்ணாமலை ஐபிஎஸ். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 

அவர் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், மாநில தலைவராக இருந்த எல்.முருகன் அண்மையில் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் ஆனார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அண்ணாமலைக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அண்ணாமலை பல விஷயங்களில் மிக சாதுர்யமாக செயல்பட்டு கட்சியின் டெல்லி தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல சிக்கலான விஷயங்களை கூட எளிதாக கையாண்டு, பிரச்சனைகளை முடித்து விடுகிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை எச்.ராஜா கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் அண்ணாமலை  பத்திரிகையாளரின் காயத்துக்கு மருந்து போடும் வகையில் தன்மையாக பேசி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என பணிவுடன் கோரினார், இதில் அவரின் செயல்பாடுகள் வரவேற்பை பெற்றது. 

இதே பாணியில் பல பிரச்சனைகளை அவர் தன்மையுடன் கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் அண்ணாமலை பல விஷயங்களில் அதிரடியாக செயல்பட்டு வருவதால் அவருக்கு எதிர்ப்புகளும் அதிகளவில்  உள்ளது. இதனால் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்றும், மத்திய உளவுத்துறையினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு  கொடுத்த ரிப்போர்டின் அடிப்படையில்  அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்க அமித்ஷா பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அண்ணாமலையின் மீது அமித்ஷாவுக்கு நன்மதிப்பு இருந்து வருவதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான தகவல்களை  பாஜக ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதுடன், அண்ணாமலைக்கு பாதுகாப்பு என்ற விஷயத்தை வரவேற்று வருகின்றனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாக வில்லை. 
 

click me!