
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் சொந்த கிராமமான திருநெல்வேலி மாவட்டம் சாலைப்புதூரே சோகத்தில் மூழ்கியுள்ளது. நேர்மையான அதே நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் குணம்கொண்ட பெரிய பாண்டியின் இழப்பால் அந்த கிராமமே கண்ணீரீல் தத்தளிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி ஊராட்சி சாலைப்புதூரைச் சேர்ந்த செல்வராஜ் - ராமாத்தாள் தம்பதியின் மகன் பெரியபாண்டியன் இவர் கடந்த 2000-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 2014-ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த செப்டம்பர் முதல் சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
பெரியபாண்டியனுக்கு பானுரேகா என்ற மனைவியும், ரூபன், ராகுல் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவருக்கு 2 சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். பெரியபாண்டியன் உயிரிழந்ததை அறிந்ததும் மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது பூர்வீக வீட்டுக்கு, உறவினர்கள் திரண்டு வந்தனர்.
தொடக்கக் கல்வியை, சொந்த கிராமத்தில் பயின்ற பெரியபாண்டியன், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அந்த காலகட்டங்களில் பேருந்து வசதி இல்லாததால் நடந்தே பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.
பின்னர், மேலநீலிதநல்லூர் பிஎம்டி கல்லூரியில் பிஎஸ்சி படித்த அவர், காவல்துறையில் சேர்ந்தார். சொந்த கிராமத்தில் தான் படித்த தொடக்கப் பள்ளிக்கு தானமாக, தனது சொந்தமான 15 சென்ட் இடத்தை வழங்கியிருக்கிறார். மேலும் அந்த ஊரில் படிக்க வசதியில்லாத பல மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தி படிக்க வைத்துள்ளார்.
தங்கள் ஊரைச் சேர்ந்த வீரமகள் பெரிய பாண்டியை நாங்கள் இழந்து தவிக்கிறோம் என கண்ணீர் வடிக்கும் சாலைபுத்தூர் கிராம மக்கள், அவரது உடலை பகல்நேரத்தில் இங்கு கொண்டு வரவேண்டும் என்றும், அப்பொழுதுதான் பெரிய பாண்டியின் உடலுக்கு அருகில் உள்ள கிராம மக்களும் அஞ்சலி செலுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
பெரிய பாண்டியின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன் பின்னர் சாலைபுத்தூர் கிராமத்துக்கு கொண்டு வர நள்ளிரவு ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரிய பாண்டியிள் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சாலைப்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.