
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக, அதிமுக, தினகரன் என ஒவ்வொரு தரப்பும் தங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையை இழந்து தனித்துவிடப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் தீவிரமாய் வேலை செய்துவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, மக்களும் அதிமுக தொண்டர்களும் தற்போதைய அதிமுக அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க துடிக்கிறார் தினகரன்.
அதேபோல், இரட்டை இலையை மீட்ட சந்தோஷத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுகவும், மக்களும் தொண்டர்களும் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு நற்பெயரும் வரவேற்பும் இருக்கிறது என்பதையும் நிரூபிக்க போராடுகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தும் ஆட்சியைக் கலைத்துவிட்டு திமுகவால் ஆட்சிக் கட்டிலில் அமரமுடியவில்லை என்ற விமர்சனத்தை சில அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை பயன்படுத்தி ஆட்சிக்கு வர விரும்பவில்லை. மக்களிடத்தில் அதிமுக அரசின் நிர்வாக தோல்வியை எடுத்துரைத்து ஆட்சிக்கு வருவோம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், அதிமுக அரசின் தவறுகளை மக்களிடத்தில் விளக்கி ஆளும் கட்சியை இடைத்தேர்தலில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.
இப்படி, ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு குறிக்கோளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடத்தில், மக்கள் செய்தி மையம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழு, ஆர்.கே.நகர் தொகுதியில் களத்தில் இறங்கி கருத்து கணிப்பு நடத்தினர். 3026 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதில் திமுகவிற்கு 36.65% வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32.39% வாக்காளர்கள் தினகரனுக்கும், 28.22% வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது
இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில், ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் ஆதரவு திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், வெற்றி வாய்ப்பு தினகரனுக்கே உள்ளதாகவும் இரண்டாவது இடத்தில் திமுகவும் மூன்றாவது இடத்தில் அதிமுகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அறிவாற்றல், துணிச்சல், நிர்வாகத்திறன், துடிப்பான செயல்பாடு, வெகுஜன உறவு ஆகிய மதிப்பீட்டில் தினகரன் முன்னிலை வகிப்பதாகவும் 35.5% வாக்காளர்கள் தினகரனுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தினகரனுக்கு அடுத்தபடியாக 28.5% வாக்குகளுடன் திமுகவின் மருது கணேஷ் இரண்டாம் இடத்திலும் 21.3% வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தி ஆர்.கே.நகர் மக்களிடையே ஓங்கி இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழு நடத்திய கள ஆய்வில், வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லயோலா கல்லூரி பேராசிரியர் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், தினகரனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு கருத்தை வெளியிட, போட்டி என்னவோ கடுமையாகத்தான் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
அதேபோல, பிரதான போட்டி என்பது திமுகவிற்கும் தினகரனுக்கும் என்பதும் கள ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட இரண்டு கருத்து கணிப்புகளிலும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
போட்டி கடுமையாக இருப்பதால், பணப்பட்டுவாடாவும் படு ஜோராக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளும் போலீசாரின் கண்காணிப்பும் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்டே இருக்க, அதை ஒட்டியுள்ள ராயபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து பணப்பட்டுவாடா படு ஜோராக செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னதான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த முறையும் பணப்பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கமாக உள்ளது. ஆளும்கட்சிக்கு வாக்களித்தால்தான் தொகுதியில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பது மக்களின் இயல்பான எண்ணமாக இருந்துவருகிறது. ஆனால், ஆளும் கட்சியாக அதிமுக இருக்கும்போதிலும், அதிகமானோர் திமுக வேட்பாளரை ஆதரித்துள்ளது, அதிமுக அரசின் மீதான ஆர்.கே.நகர் மக்களின் அதிருப்தியை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் ஆட்சியாளர்களிடையே அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.